வாக்குரிமையிலிருந்து ஆட்சிப் பங்கிற்கு: பெண்கள் எழுச்சியின் நூற்றாண்டு பயணம்! -(எழுத்தாளர் க. சரஸ்வதி – பொருளாளர், யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்டோர் நல சங்கம், தமிழ்நாடு

1 hour ago 10

தமிழ்நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்த வரலாற்று நாள் – 10 மே 1921

இந்திய அரசியலில் பெண்களின் பயணம், வெறும் வாக்குரிமைக்காக போராடிய நிலையிலிருந்து, இன்று அரசியல் அதிகாரத்தில் உறுதியான இடத்தைப் பெறும் நிலைக்கு வளர்ந்துள்ளது. பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெறும் பாதை ஒரு தனித்த நிகழ்வு அல்ல; அது நூற்றாண்டுக்கும் மேலாக உலகளாவிய சமூக மற்றும் சட்ட மாற்றங்களின் அலைகளால் உருவான ஒரு நீண்ட பயணம்.

தென்னிந்தியாவில் பெண்களுக்கு அதிகாரமளித்த முன்னோடியாகக் கருதப்படுவது நீதிக்கட்சி (Justice Party), (அதிகாரப்பூர்வமாக தென்னிந்திய நல உரிமை சங்கம் (South Indian Liberal Federation)) ஆகும்.

1920 முதல் 1937 வரை மதராஸ் மாகாணத்தை ஆட்சி செய்த நீதிக் கட்சி, பார்ப்பன ஆதிக்கத்துக்குச் சவால் விடுத்து சமூக நீதியை முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், சமூக நீதி அடைய ‘பெண் விடுதலை’ அவசியமான அடித்தளம் என்று அதன் தலைவர்கள் புரிந்துகொண்டிருந்தனர்.

சட்டப்பூர்வ முன்னேற்றம்
– வாக்குரிமை (1921)

1921ஆம் ஆண்டு, நீதிக்கட்சி தலைமையிலான அரசு மதராஸ் சட்டமன்றத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியது.

இதன் மூலம் பிரிட்டிஷ் இந்தியாவில் முதன்முறையாகப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய மாகாணமாக மதராஸ் மாறியது. பாலின அடிப்படையிலான வாக்குரிமைத் தடைகள் நீக்கப்பட்டன.

சமூக சீர்திருத்தம் – பெண்கள் உரிமை
சமூக நீதியின் அங்கம்

நீதிக்கட்சி பெண்கள் உரிமையை தனித்த பிரச்சினையாக அல்ல, முழுமையான சமூக நீதி திட்டத்தின் முக்கியக் கூறாக கருதியது.

நீதிக்கட்சி ஆதரவுடன் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறையை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றினார். மதத்தின் பெயரில் பெண்களை முறையாகச் சுரண்டும் இந்த அமைப்பை முடிவுக்கு கொண்டு வர, கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொண்ட போதும், தேவதாசி ஒழிப்பு மசோதாவை நீதிக்கட்சி ஆதரித்தது. பின்னர் அது சட்டமாகி, ஆயிரக்கணக்கான பெண்களை மரபுசார் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தது.

நீதிக்கட்சியும், அதைத் தொடர்ந்து தந்தை பெரியாரால் உருவான சுயமரியாதை இயக்கமும் பெண்களுக்கான உரிமைகளை வெறும் கோரிக்கையாக மட்டுமே வைக்கவில்லை. பெண்களின் பிரதிநிதித்துவம் ஒரு நவீன சமூகத்திற்கு அடிப்படையான தேவையாகும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

1921இல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டதன் தொடர்ச்சியாக,  1926இல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இதன் மூலம் பெண்கள் அரசியல் கொள்கை உருவாக்கத்தில் முன்னணி வகிக்க முடியும் என்பதை நீதிக்கட்சி நிரூபித்தது.

1929 செங்கல்பட்டு தீர்மானம்

தந்தை பெரியார் நடத்திய முதல் சுயமரியாதை மாநாட்டில், பெண்களுக்குச் சொத்துரிமையில் சமத்துவமும், அனைத்து வேலைகளிலும் சம வாய்ப்பும் வழங்க வேண்டும் என்ற புரட்சிகரக் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெண்களின் விடுதலை ஆண்களால் “வழங்கப்படும் சலுகை அல்ல; அவர்களுக்கே உள்ள உரிமை“  என்றார் பெரியார். இந்த எண்ணமே இன்று பெண்கள் இடஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படை தத்துவமாக உள்ளது.

நீதிக்கட்சியின் கனவு பின்னர் திராவிட இயக்கங்களின் மூலம் தேசிய அளவுக்கு விரிந்தது.

பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டைச் சட்டம் ஏற்றபிறகு, அதைச் செயல்படுத்திய முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக இருந்தது.

1996ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டுடன் நடைபெற்றது.

“தமிழ்நாடு முறை” பெண்கள் தலைமையில் அடிப்படை நிர்வாகம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்தது. பின்னர் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33% வழங்கும் கோரிக்கை வலுப்பெற்றது. நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

இதைக் கையில் எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி, ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ (106ஆவது அரசிய லமைப்புச் சட்டத் திருத்தம்) என்னும் பெயரில் மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

நீதிக்கட்சி நூறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய முயற்சி தேசிய அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

சுயமரியாதை இயக்கத்தின் சிந்தனை மாற்றம்

தந்தை பெரியார் தலைமையில், நீதிக்கட்சி என்னும் அரசியல் இயக்கம் சமூக மாற்ற இயக்கமாக வளர்ந்தது.

பெண்கள் அதிகாரமளிப்பு – மூன்று ‘E’ கள்

நீதிக்கட்சியின் வளர்ச்சி மாதிரி மூன்று தூண்களின் மீது அமைந்தது:

Education – கல்வி, Employment – வேலைவாய்ப்பு, Equity – சமத்துவம்

இன்று வளர்ச்சி கொள்கைகளின் அடிப்படையாக இதுவே தொடர்கிறது.

நீதிக்கட்சி பெண்கள் உரிமையை “கருணை” என்ற பார்வையிலிருந்து “நீதி” என்ற பார்வைக்கு மாற்றியது. பெண்கள் முன்னேற்றத்தில் அரசே முதன்மை இயக்க சக்தியாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் முதலில் நிரூபித்தனர்.

உள்ளாட்சியில் 50% அடிப்படையில் கிராமப் பஞ்சாயத்து தேர்தல்கள் அதிமுக காலத்திலும், நகராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் திமுக காலத்திலும் நடைபெற்றன.

நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் இன்றும் முக்கியமாக பேசப்படும் கேள்வியாக உள்ஒதுக்கீடு குறித்த கேள்வி எழுந்து நிற்கிறது.

நீதிக்கட்சி எப்போதும் மிகவும் பின்தங்கியவர் களுக்கு இடஒதுக்கீடு சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தியது.

சமூகநீதியை வலியுறுத்தும் கட்சிகள், குறிப்பாக நீதிக்கட்சியின் சிந்தனையைத் தொடர்ந்து வரும் அரசியல் இயக்கமான திமுக, பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பெண்களுக்குத் தனி உள் இடஒதுக்கீடு இல்லாமல் 2023 சட்டம் முழுமையடையாது என்று வாதிடுகின்றன.

அப்போதுதான் இந்த நூற்றாண்டுக் கனவு உயர்ஜாதி, பணக்காரப் பெண்களிடம் மட்டும் அல்ல, மிகவும் பின்தங்கிய சமூகங்களிடமும் சென்றடையும்.

Read Entire Article