விஜய் பதவியேற்பில் பெருஞ்சிக்கல்; ‘குதிரை பேரம்’ என காவல்துறையில் புகார்

1 hour ago 10

2120cd2e-afbc-45e9-a399-2f663bd997d5

தமது கட்சி எம்எல்ஏ ஆதரிப்பதாக தவெக போலிக் கடிதம் தயாரித்துள்ளது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வெள்ளிக்கிழமை (மே 8) நள்ளிரவில் காவல்துறையிடம் புகார் அளித்தார். - படம்: ஒன் இந்தியா

சென்னை: தவெக தலைவர் ஜோசப் விஜப் தமிழக முதல்வராக இன்று பதவி ஏற்பார் என்று தகவல் பரவிய நிலையில், அரசியல் கள நிலவரம் வேறுபக்கம் திரும்பி உள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தராமல் இழுத்தடிப்பதும் தவெகவுக்கு ஆதரவளிக்கவில்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்திருப்பதும் விஜய்யின் ஆட்சிக் கனவுக்கு இப்போதுவரை தடைபோட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஆளுநரைச் சந்தித்த பிறகு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் தவெகவிற்குப் பெரும் பின்னடைவாக மாறியுள்ளன.

குறிப்பாக, அமமுக எம்எல்ஏ காமராஜ் ஒரு காருக்குள் அமர்ந்து ஆதரவுக் கடிதத்தில் கையெழுத்திடும் காணொளியை தவெக தரப்பு வெளியிட்டிருந்தது.

ஆனால், அந்த காணொளியே எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கக்கூடிய ‘குதிரை பேரம்’ நடந்ததற்கான மிக முக்கிய சாட்சியாக இப்போது மாறியுள்ளது.

அந்தக் காணொளி வெளியான ஒரு மணி நேரத்திற்குள், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்தார். தமது கட்சி எம்எல்ஏ ஆதரவு அளித்திருப்பதாக தவெக போலிக் கடிதம் தயார் செய்ததாக அந்தப் புகாரில் அவர் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்தப் புகார் விஜய்க்குப் பெருஞ்சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தமது கட்சியின் ஒரே எம்எல்ஏவைக் கடத்திச் சென்று, கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

“ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஏன் காருக்குள் வைத்து ரகசியமாகக் கையெழுத்திட வேண்டும்? அவர் மிரட்டப்பட்டாரா அல்லது விலைக்கு வாங்கப்பட்டாரா?,” என்ற கேள்விகள் ஆளுநர் மாளிகையை எட்டியுள்ளன.

இதற்கிடையில், எம்எல்ஏ காமராஜ் ஆளுநரை நேரில் சந்தித்து, “நான் விஜய்க்கு ஆதரவு அளிக்கவில்லை,” என்று வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அதனால் ஆளுநர் கடும் கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

போலிக் கடிதங்கள் மற்றும் கட்டாயப்படுத்தப்பட்ட காணொளிகள் மூலம் ஒரு மாநில அரசை அமைக்க உரிமை கோருவது ‘அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது’ என ஆளுநர் கருதுவதாகத் தெரிகிறது.

இந்நிலையில், நடப்புச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 10ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது.

ஆட்சியமைப்பதில் நிலவும் இழுபறி, ‘குதிரை பேர’ புகார்கள், போலி ஆவணச் சர்ச்சைகள் என விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது.

அந்தக் காரணங்களால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு மற்றும் ஜனநாயக மாண்பு குலைந்துள்ளதாகக் கருதி, அதிபர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read Entire Article