விந்துநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு தேவை

58 minutes ago 15

‘புரோஸ்டேட்’ சுரப்பி (Prostate gland) எனப்படும் விந்துநீர்ச் சுரப்பி, ஆண்களின் சிறுநீர்ப்பைக்குக் கீழே அமைந்துள்ள, விந்தணுக்கள் உயிர்வாழத் தேவையான திரவத்தைச் சுரக்கும் உறுப்பாகும்.

அதனைப் பாதிக்கும் ‘விந்துநீர்ச் சுரப்பிப் புற்றுநோய்’ (Prostate cancer) பற்றிக் கலந்துரையாடல் அதிகம் நடைபெறாதபோதும், சிங்கப்பூர் ஆண்களிடையே அதிகம் காணப்படும் புற்றுநோய் வகைகளில் அது முன்னிலை வகிக்கிறது.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குமுன், இங்குள்ள ஆடவரை அதிகம் பாதித்த புற்றுநோய்களின் பட்டியலில் பெருங்குடல் புற்றுநோய் (colorectal cancer) முதலிடத்தில் இருந்தது என்று பார்க்வே புற்றுநோய் நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் தனுஜா ராஜசேகரன் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் நால்வரில் ஒருவருக்குப் புற்றுநோய் உறுதிசெய்யப்படுவதாகச் சில தகவல்கள் கூறுகின்றன. இது மிகவும் கவலைக்குரியது என்றார் டாக்டர் தனுஜா.

2018க்கும் 2022க்கும் இடைப்பட்ட காலத்தில் புற்றுநோய் உறுதிசெய்யப்பட்ட ஆண்களில் ஏறத்தாழ 17 விழுக்காட்டினருக்கு விந்துநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் உறுதிசெய்யப்பட்டதாக ஹெல்த்365.எஸ்ஜி தளம் குறிப்பிடுகிறது.

2017க்கும் 2021க்கும் இடைப்பட்ட காலத்தில் இத்தகைய 6,912 சம்பவங்கள் பதிவானதாகச் சிங்கப்பூர்ப் புற்றுநோய்ப் பதிவகம் தெரிவித்தது.

விந்துநீர்ச் சுரப்பியில் உள்ள திசுக்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து கட்டியாக இறுகுவதை விந்துநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் குறிக்கிறது. ஆண்களில் சிலருக்கு இந்நோயின் பாதிப்பு குறைவாக இருக்கும்; வேறு சிலருக்குப் புற்றுநோய் உடல் முழுவதும் பரவலாம்.

புற்றுநோய் அபாயம்

ஆண்களுக்கு வயது கூடும்போது விந்துநீர்ச் சுரப்பிப் புற்றுநோய்க்கான அபாயமும் அதிகரிக்கிறது. விந்துநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் பாதித்த ஆடவரில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் 70 வயதைக் கடந்தவர்கள் என்று டாக்டர் தனுஜா தெரிவித்தார்.

அத்துடன், ஒருவரது குடும்பத்தில் தந்தை, மாமா என யாரேனும் இவ்வகைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் அவருக்கும் இந்த வகைப் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் என்று டாக்டர் தனுஜா கூறினார்.

விலங்குகளின் கொழுப்பு அதிகமுள்ள உணவுமுறை, புகைபிடித்தல், உடற்பருமன் ஆகியவற்றாலும் விந்துநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் சொன்னார்.

இருந்தபோதும், இந்நோய்க்கும் பாலியல் நடவடிக்கைகளுக்கும் தொடர்பில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

சமூகப் பார்வை

விந்துநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் ஆண்களின் பாலின உறுப்புடன் தொடர்புடையதாய் இருப்பது போலவே, மார்பகப் புற்றுநோய் பெண்ணின் பாலின உறுப்புடன் தொடர்புடையது.

இருந்தபோதும், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் பலர் வெளிப்படையாகப் பேசி ஒருவருக்கொருவர் ஆதரவு காட்டும் போக்கு, விந்துநீர்ச் சுரப்பிப் புற்றுநோயுள்ள ஆண் நோயாளிகளிடம் அவ்வளவாக இல்லை என்றார் டாக்டர் தனுஜா.

“தங்கள் அனுபவங்களைப் பற்றிப் பேசவே ஆண்கள் தயங்குகின்றனர். கழிவறைக்குப் போவது, பாலியல் உறவில் ஈடுபடுவது ஆகியவற்றை இந்நோய் நேரடியாகப் பாதிப்பதால் அவர்கள் இவற்றைப் பற்றிப் பேசக் கூச்சப்படலாம்.

“இப்போதுள்ள முதிய தலைமுறை ஆண்கள் இந்த விவகாரங்களைப் பேசுவதற்குத் தயங்கக்கூடும்,” என்று அவர் கூறினார். விந்துநீர்ச் சுரப்பிப் புற்றுநோயைத் தூண்டுவது ஆண்மை இயக்குநீர் (testosterone) என்பதால், இதற்கான சிகிச்சையின்போது உடலில் உள்ள ஆண்மை இயக்குநீர் குறைக்கப்படுகிறது. இதனை ஆண்மைக்குறைவு என்று சிலர் கருதக்கூடும்,” என்று டாக்டர் தனுஜா சுட்டினார்.

விந்துநீர்ச் சுரப்பிப் புற்றுநோய்க்கு எதிரான பாகுபாட்டை அமெரிக்காவில் உள்ள நோயாளிகளில் 60 விழுக்காட்டினர் உணர்வதாகக் கூறும் ஆய்வு ஒன்றைக் குறிப்பிட்ட டாக்டர் தனுஜா, இங்குள்ள நோயாளிகளும் அதனை உணரக்கூடும் என்றார்.

நோயாளிகள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்பைப் பிறருடன் பகிர்வதற்குச் சமூகம் ஆதரவு அளிக்கலாம் என்று டாக்டர் தனுஜா கேட்டுக்கொண்டார்.

Read Entire Article