சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை விமான சாகசக் காட்சிக் குழுவுடன் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: எம்டிடிஐ
சிங்கப்பூரில் நடைபெறும் விமானக் கண்காட்சிக்கு பெரும் திரளான மக்கள் வந்துள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமானங்களையும் விமான சாசகக் காட்சிகளையும் சனிக்கிழமை அன்று ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர்.
ஈராண்டுக்கு ஒரு முறை நடைபெறும் விமானக் கண்காட்சி பிப்ரவரி 3 முதல் 8 வரை சாங்கியில் நடைபெறுகிறது.
வார இறுதி நாளான சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரு நாள்களில் மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
முதல் நாளான சனிக்கிழமை கூட்டம் அலைமோதியது. ஏராளமானவர்கள் மெய்சிலிர்க்க வைக்கும் விமான சாகசக் காட்சிகளை கண்டு ரசித்ததோடு பல்வேறு வகையான விமானங்களில் ஏறி படமெடுத்துக் கொண்டனர்.
விமானக் கண்காட்சியில் பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் படமெடுத்துக் கொண்ட பொதுமக்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
பிரதமர் லாரன்ஸ் வோங்கும் இதனைத் தவறவிடவில்லை. அங்கு வந்த அவர் விமான சாகசக் காட்சிகளைப் பார்த்து பல்வேறு நிறுவனங்கள் அமைத்திருந்த முகப்புகளைச் சுற்றிப் பார்த்தார்.
இந்தோனீசியாவைச் சேர்ந்த ரஃபி டாமரும் 2012ஆம் ஆண்டிலிருந்து தமது தந்தையுடன் சிங்கப்பூர் விமானக் கண்காட்சிக்கு தவறாமல் வருகிறார்.
தற்போது சிங்கப்பூரில் தளவாடத் துறையில் அவர் பணியாற்றி வருகிறார்.
“இந்த வருடம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கூட்டம் வந்துள்ளது,” என்று 28 வயது ரஃபி டாமர் கூறினார்.
அவ்வளவு கூட்டம் இருந்தும் திறமையாகக் கையாளப்பட்டதை அவர் பாராட்டினார்.
தென்கிழக்கு ஆசியாவிலேயே இந்த நிகழ்ச்சியில்தான் ஏராளமான பல வகையான விமானங்களை ஒரே இடத்தில் பார்க்க முடியும் என்றார் அவர்.
“இந்தோனீசியாவில் இதுபோன்ற நிகழ்ச்சி இல்லை. வெகுதூரத்தில் பாரிஸ் அல்லது இங்கிலாந்தில் உள்ள ஹாம்ப்ஷயரில் விமானக் காட்சிகள் நடைபெறுகின்றன. துபாயிலும் நடக்கிறது. ஆனால் சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் அருகருகே இருப்பதால் நான் ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும்,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற கண்காட்சியில் 60,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
பிப்ரவரி 7ஆம் தேதி பல்வேறு வகையான விமானங்களை ஏறியும் இறங்கியும் உட்கார்ந்தும் படமெடுத்துக் கொண்டும் ரசித்த பொதுமக்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
மேலும், இந்த விமானக் கண்காட்சியின் முதல் நான்கு நாள்கள் வர்த்தகர்களுக்காக ஒதுக்கப்பட்டது. அந்த நான்கு நாள்களில் 65,000 வர்த்தகர்களை அது ஈர்த்துள்ளது.
இது, இதுவரை இல்லாத புதிய உச்சம் என்று நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும் நிறுவனமான எக்ஸ்பிரியா தெரிவித்தது.
சுமார் 130 நாடுகள், வட்டாரங்களிலிருந்து வர்த்தகப் பேராளர்கள் கலந்துகொண்டதாகவும் . இந்தக் கண்காட்சியில் 1,100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றதாகவும் எக்ஸ்பிரியாக குறிப்பிட்டது.
பிப்ரவரி 7ஆம் தேதிக்கான விமான சாகசக் காட்சிக்கான நுழைவுச் சீட்டுகள் ஏற்கெனவே விற்றுத்தீர்ந்துவிட்டதை சிஸ்டிக் நிலையத்தின் இணையத் தளம் தெரிவிக்கிறது.
பெரியவர்களுக்கான நுழைவுச் சீட்டு $39, மூன்று முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு $19. ஞாயிற்றுக் கிழமைக்கான (பிப்ரவரி 8) நுழைவுச் சீட்டுகள் இன்னும் இருப்பதை இணையத் தளம் காட்டுகிறது.
அடுத்த விமானக் கண்காட்சி, சிங்கப்பூரில் 2028ல் பிப்ரவரி 15 முதல் 20 வரை நடைபெறவிருக்கிறது.
இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் சாகசக் குழுவைச் சந்தித்த பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: எம்டிடிஐ
.png)







English (US) ·