வீட்டில் இருந்து பிள்ளைகளை பராமரிக்கும் தந்தையான ஆப்ரகாம் இயோ தனது மனைவி பெங் செங் யூ மற்றும் ஐந்து, மூன்று, ஒரு வயது குழந்தைகளுடன் இருக்கிறார். - படம்: ஆப்ரகாம் இயோ
சிங்கப்பூரில் தந்தையர்களின் பொறுப்பு மாறி வருகிறது.
தந்தையர்கள், வீட்டிலேயே தங்கியிருந்து முழுநேரமாக பிள்ளைகளை கவனிப்பது அந்த மாற்றமாகும்.
இத்தகைய தந்தையர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஊழியர் அணி சாராத வீட்டில் தங்கும் தந்தையர்களின் எண்ணிக்கை 2022ல் 1,900இல் இருந்து 2025ல் 3,000க்குக் கூடியுள்ளதாக மனிதவள அமைச்சின் சிங்கப்பூர் ஊழியர் அணியின் ஆண்டறிக்கை தரவுகள் காட்டுகின்றன.
2022ல் 3.5 விழுக்காடாக இருந்த வீட்டில் பிள்ளைகளைப் பராமரிக்கும் இவர்கள், ஊழியர் அணி அல்லாத குடியிருப்பாளர்களில் 7.4 விழுக்காடாக அதிகரித்துள்ளனர்.
இதே காலகட்டத்தில் வீட்டில் தங்கும் தாய்மார்களின் எண்ணிக்கை 51,600லிருந்து 37,300க்குக் குறைந்துள்ளது.
இதில், பகுதி நேர வேலையுடன் குழந்தைகளைப் பராமரிக்கும் இல்லத்தரசிகளை இந்தப் புள்ளிவிவரங்கள் உள்ளடக்கவில்லை.
பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் ஏற்பாடு நடைமுறைக்கு வந்தது. இது, பின்னர் இயல்பான வாழ்க்கையாக மாறியது. அந்த வழக்கத்தின் காரணமாக சிங்கப்பூரில் தங்கள் பிள்ளைகளை நேரடியாகக் கவனிக்கும் தந்தையர்கள் எண்ணிக்கை பரவலாக அதிகரித்துள்ளதையே புள்ளி விவரங்கள் காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இந்த மாற்றத்தை மிகைப்படுத்திக் கூற முடியாது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
தந்தையர்கள் அதிகப் பராமரிப்புப் பொறுப்புகளை ஏற்பதற்கு வேலையிட விதிமுறைகளின் ஆதரவு குறைவாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் இன்னமும் தாய்மார்களே முதன்மை பராமரிப்பாளர்களாக இருக்கின்றனர் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் சமத்துவமான சமூகத்தை நோக்கி நகர்வதற்கு அடிப்படையான மாற்றங்கள் தேவை என்றும் தந்தையர்களின் அதிக ஈடுபாடுகளால் ஏற்பட்டுள்ள பலன்களை ஆய்வுகள் காட்டுவதாகவும் அவர்கள் கூறினர்.
முழுநேரப் பராமரிப்புப் பணிகளுக்காக வேலையை கைவிடுபவர்களைத் தவிர, வீட்டில் இருந்து குழந்தைகளைப் பராமரிக்கும் தந்தையர்களில் பல்வேறு பொறுப்புகளில் தொடர்ந்து ஈடுபவர்களும் அவர்களில் அடங்குவர் என்று தந்தையர் நிலையத்தின் தலைமை நிர்வாகி சாண்டர் ஓங் கூறினார்.
வீட்டில் தங்கும் தந்தையர்களின் எண்ணிக்கையை அந்த லாப நோக்கற்ற அமைப்பு கண்காணிக்கவில்லை. இருந்தாலும் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட உதவும் வேலை ஏற்பாடுகளை அதிகமானோர் தேர்வு செய்வதை அது கவனித்து வந்துள்ளது என்றார் அவர்.
அவர்களில் பகுதிநேர, சுயதொழில் அல்லது நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளில் இருப்பவர்களும் வீட்டில் இருந்து தொழில் செய்ய விரும்புவோரும் அடங்குவர்.
2024ல் 669 தந்தையர்களிடமும், 2025ல் 801 தந்தையர்களிடமும் ‘சென்டர் ஃபார் ஃபாதரிங்’ நடத்திய ஆய்வுகள், பகுதிநேர வேலை, சுயதொழில் அல்லது புதிய தொழிலில் ஈடுபடும் தந்தையர்கள் அவர்களில் அதிகமாக இருப்பதைக் காட்டுகின்றன. இந்த எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் 14.5 விழுக்காட்டிலிருந்து 16.4 விழுக்காடாக அதிகரித்தது.
ஜூன் 2025ல் வெளியிடப்பட்ட ஓர் உள்ளூர் ஆய்வின்படி, தந்தையர்கள் குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தபோது, குழந்தைகளுக்கு நடத்தைச் சார்ந்த பிரச்சினைகள் குறைவாகவும் தேர்வு மதிப்பெண்கள் சிறப்பாகவும் இருந்தன.
“பெருந்தொற்று, பெற்றோரின் குழந்தைப் பராமரிப்புப் பணிகளை எடுத்துக் காட்டியது. இது, குழந்தைப் பராமரிப்புப் பணிகளை ஆண்களும் செய்ய சமூகத்திலும் பணியிடங்களிலும் மாற்றம் ஏற்பட உதவியது,” என்று கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளரான முனைவர் டான் போ லின் கூறினார்.
அதே ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் கல்பனா விக்னேசா, “நீக்குப்போக்கான வேலை ஏற்பாடு பொதுவான வழக்கமாக மாறியதால் தந்தையர்களுக்கு முதன்மை பராமரிப்பு பொறுப்புகளை ஏற்பதில் இருந்த உளவியல், நடைமுறைத் தடைகள் குறைந்தன,” என்றார்.
“யார் அதிகமாக வருமானம் ஈட்டுகிறார்கள், யாருடைய வேலை நீக்குப்போக்காக இருக்கிறது, யார் வேலையை கைவிட்டால் பாதிப்பு குறைவாக இருக்கும் போன்றவற்றை மதிப்பிட்டு இருவரும் சம்பாதிக்கும் தம்பதிகள் ஒரு முடிவுக்கு வருகின்றனர்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
.png)







English (US) ·