வெனிசுவேலா: அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்கிறது

22 hours ago 16

12e09a4f-2309-4fbd-894e-de52a83bcf30

வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் யுவான் பாப்லோ குவானிப்பா (குண்டு துளைக்க முடியாத மேலங்கி), சென்ற ஆண்டு (2025) மே மாதம் கைதுசெய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட படம். - படம்: வெனிசுவேலா அரசாங்கத் தொலைக்காட்சி, கையேடு, ராய்ட்டர்ஸ்

கரகாஸ்: வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் யுவான் பாப்லோ குவானிப்பா, புகழ்பெற்ற வழக்கறிஞர் பெர்க்கின்ஸ் ரோச்சா இருவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் குடும்பத்தார் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) வெளியிட்ட அறிக்கைகளில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அந்நாட்டு அரசாங்கத்தை அமெரிக்கா நெருக்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து வெனிசுவேலாவின் அண்மை நடவடிக்கை வந்துள்ளது.

மனித உரிமைக் குழுவான ஃபோரோ பெனால், ஞாயிற்றுக்கிழமை, 30 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவித்தது. மேலும் யாரேனும் விடுதலை செய்யப்பட்டார்களா என்பதை விசாரித்துவருவதாகவும் அது சொன்னது.

வெனிசுவேலாவின் அரசாங்கம் ஜனவரி 8ஆம் தேதி அரசியல் கைதிகளை விடுவிக்கப்போவதாகக் கூறியிருந்தது. அதன்படி, 383 பேர் ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்டதாகக் குழு குறிப்பிட்டது.

நொபெல் பரிசை வென்றவரும் எதிர்த்தரப்புத் தலைவருமான திருவாட்டி மரியா கொரினா மச்சாடோவுக்கு நெருக்கமானவர்கள் திரு குவானிப்பாவும் திரு ரோச்சாவும்.

வென்ட்டே வெனிசுவேலா எதிர்த்தரப்பு இயக்கத்தின் வழக்கறிஞரான திரு ரோச்சா, 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் தடுத்துவைக்கப்பட்டார். திரு குவானிப்பா சென்ற ஆண்டு மே மாதம் கைதுசெய்யப்பட்டார். பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அவர், பல மாதங்கள் மறைந்து வாழ்ந்தார். இருவருமே அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்தனர்.

அண்மை விடுதலை நடவடிக்கை குறித்துத் திருவாட்டி மச்சாடோ, ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் மகிழ்ச்சி தெரிவித்தார். அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

நாட்டின் சோ‌ஷியலிச அரசாங்கம், கருத்து வேறுபாடுகளை நசுக்குவதற்காகத் தடுப்புக்காவல்களைப் பயன்படுத்துகிறது என்று எதிர்க்கட்சிகளும் மனித உரிமைக் குழுக்களும் பல்லாண்டாகக் கூறிவருகின்றன.

ஆனால் அரசாங்கம், அரசியல் கைதிகளைத் தடுத்துவைத்திருப்பதாகச் சொல்லப்படுவதை மறுக்கிறது. கைதுசெய்யப்பட்டவர்கள் குற்றம் புரிந்தவர்கள் என்று அது கூறுகிறது.

சென்ற மாதம் அமெரிக்கா, வெனிசுவேலாவின் அப்போதைய அதிபர் நிக்கலஸ் மடுரோவைக் கைதுசெய்தது. பிறகு, வெனிசுவேலாவின் இடைக்கால அதிபரானார் டெல்சி ரோட்ரிகஸ். அதனைத் தொடர்ந்து, அதிக எண்ணிக்கையில் அரசியல் கைதிகளை விடுவித்து வருகிறது வெனிசுவேலாவின் அரசாங்கம்.

Read Entire Article