2026 ஜனவரி 1 முதல் மே 10 வரையிலான காலகட்டத்தில், தாய்லாந்து 12.4 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை ஈர்த்துள்ளது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்
பேங்காக்: குற்றச் செயல்களைத் தடுக்க உதவும் வகையில், 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளுக்கான விசா இல்லாத் தங்கும் காலத்தை 60 நாள்களிலிருந்து 30 நாள்களாகத் தாய்லாந்து குறைக்கவுள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான திட்டத்தை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக தமது அமைச்சு தாக்கல் செய்யும் என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசக் புவாங்கேட்கேவ் செவ்வாய்க்கிழமை (மே 12) தெரிவித்தார்.
எனினும், அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
தாய்லாந்து 2024 ஜூலை முதல் 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளுக்கு விசா இன்றித் தங்கும் காலத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தாய்லாந்திற்குச் செல்லும் சுற்றுப்பயணிகள் அந்தந்த விசாக்களின் நோக்கத்திற்கு இணங்கச் செயல்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பிற விசா வகைகளையும் தாய்லாந்து அதிகாரிகள் ஆய்வுசெய்யவுள்ளனர்.
நீட்டிக்கப்பட்ட விசாக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது, சுற்றுப்பயணிகளில் ஒரு சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்த கவலைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
2026 ஜனவரி 1 முதல் மே 10 வரையிலான காலகட்டத்தில், தாய்லாந்து 12.4 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை ஈர்த்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிட, இது 3.43 விழுக்காடு குறைவு.
.png)







English (US) ·