பைசன் திரைப்படத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ரஜிஷா விஜயன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
Published:22 mins agoUpdated:Just Now
துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் (காளமாடன்) திரைப்படம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அனுபாமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகை ரஜிஷா விஜயன், ``என்னை முதன்முதலில் கர்ணன் படத்தில் நடிக்க அழைத்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
பைசன் திரைப்பட விழா: ரஜிஷா விஜயன்
கர்ணன் படத்துக்குப் பிறகு இரண்டு படம் எடுத்துவிட்டார். அப்போதும் என்னை ஏன் அந்தப் படங்களுக்கு அழைக்கவில்லை எனக் கேட்டேன். அந்தப் படங்களில் உனக்கான கேரக்டர் செட் ஆகாது-னு சொன்னார். திடீர்னு ஒருநாள் கால் பண்ணி, படம் எடுக்கப்போறேனு சொன்னார்.
ஆனால்... அதுல அக்கா கேரக்டர் இருக்கு நீ பண்ணுவியா கேட்டார். அதுக்கு நான் என்ன அக்கா, தங்கச்சி, அம்மானு இதெல்லாம் எனக்கு முக்கியம் இல்ல சார் உங்க படத்துல நடிச்சா போதும்னு சொன்னேன். கர்ணன் படத்துக்காக நீச்சல் கற்றுக்கொண்டேன்.
அதற்குப் பிறகு எனக்கு நீச்சல் பழக்கமே இல்லை. இந்தப் படத்தில் நடிக்கும் போது கிணற்றில் குதிக்கும் படியான ஒரு காட்சி இருந்தது. என்னிடம் மாரிசார் நீச்சல் தெரியும்ல எனக் கேட்டார். நான் தெரியும் எனத் தலையாட்டினேன்.
உடனே குதிக்கச் சொன்னார். அனுபமா குதித்து நீந்தினார். நான் தண்ணீரில் மூழ்கிக்கொண்டே இருந்தேன். சில வினாடிகள் என் மனதில் 'அவ்வளவுதான் நம் வாழ்க்கை' என மின்னல் போல தோன்றியது.
பைசன் திரைப்பட விழா: ரஜிஷா விஜயன்
அடுத்த வினாடி கண் திறந்தபோது, கூலிங் கிளாஸ், ஷூவுடன் என்னை தண்ணீரில் குதித்து என்னைக் காப்பாற்றினார் மாரி சார். அவ்வளவு நம்பிக்கைக்குரியவர் மாரிசார்.
இந்த படத்தில் ஸ்போர்ட்ஸ், குடும்பம் , ரொமான்ஸ் என எல்லாமே இருக்கின்றது. மாரி சார் எடுத்த படங்களிலே இதுவரைக்கும் இல்லாதது இந்த படத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது.
கடைசியாக திருநெல்வேலி ஊர் மக்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால் நான் கேரளத்தைச் சேர்ந்த ஒரு மலையாளி எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்து, தென் தமிழகத்தில் ஒருவராக மாற்றிவிட்டார்கள். அவர்களின் அன்புக்கு நன்றி." எனக் கலங்கியபடி பேசி முடித்தார்.