வாழ்வை வளமாக்கிய சமூகத்துக்குத் திருப்பிக் கொடுக்கும் இளையர்

4 hours ago 13

914619a4-0455-48cd-b999-e6a085152b9e

ஷங்ரிலா ஹோட்டல் அரங்கில் சனிக்கிழமை (செப்டம்பர் 27) நடைபெற்ற ‘சிங்கப்பூர் அறியப்படாத நாயகர்கள்’ விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற சரத் குமார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தமது வாழ்வை வளமாக்கிய சிங்கப்பூர்ச் சமூகத்துக்கு இயன்ற அளவு உதவ வேண்டும் என்கிற ஆழமான நோக்குடன் செயல்படுகிறார் ஏழுமலை சரத் குமார், 29.

தனது நண்பர்கள் அவரவர் குடும்பத்தில் நிகழும் பிரச்சினைகள், சிக்கல்களைப் பகிரும்போதும், உதவி நாடும்போதும், இது பல குடும்பங்களில் நடக்கலாம், அவர்களுக்கு உதவி தேவைப்படலாம் எனும் எண்ணம் எழுந்ததாகக் கூறினார் சரத்குமார்.

கடந்த ஆறாண்டுகளாகச் சிங்கப்பூரில் வசிக்கும் இவர், ஐந்தாண்டுகளாகத் தொண்டூழியம் செய்கிறார்.

பூன் லே சமூக நிலையத்திலும், காசா ரவுதா அமைப்பிலும் தொண்டூழியராகச் செயல்படத் தொடங்கினார். கடந்த மூவாண்டுகளாகத் தொண்டூழியம் மேற்கொள்ளும் இவரது பணியை அங்கீகரிக்கும் விதமாக இவ்வாண்டுக்கான அறியப்படாத நாயகர்கள் விருதுகளில் ‘அன்பான வெளிநாட்டவர்’ விருதின் இறுதிக் கட்டத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

முதலில், காசா ரவுதாவில் நிகழ்ச்சிகளுக்கு வரும் பெண்களுக்கு உதவும் வகையில், அவர்களது குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, அவர்களைச் சிறு சிறு நடவடிக்கைகள் மேற்கொள்ளச் செய்வது, வாழ்வியல் திறன்களைக் கற்றுக்கொடுப்பது ஆகியவற்றில் ஈடுபட்டார்.

குழந்தைகள் தொண்டூழியர்களுடன் நேரம் செலவிடும்போது வெளிக்காட்டும் மகிழ்ச்சியின்மூலம், சாதாரணமாக நேரம் செலவிடுவதுதானே என நினைப்பதன் பின்னணியில் பெருமகிழ்ச்சி அடங்கியுள்ளதை உணர்ந்ததாகக் கூறினார் சரத்.

‘மகிழ்வித்து மகிழ்’ என்பதை வாழ்க்கைக் கொள்கையாக ஏற்ற அவர், தொடர்ந்து பிற வழிகளிலும் குடும்பக் கட்டமைப்பு முன்னேற்றத்துக்காகச் செயல்பட விரும்பினார்.

தொடர்ந்து, குடும்பக் கட்டமைப்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்குப் பொறுப்பேற்க ஆண்களுக்கு உதவும் திட்டத்தில் (Men Empowerment @ Casa Cares) செயல்படத் தொடங்கினார்.

இதற்கென ஆறுமாத காலம் பயிற்சி மேற்கொண்ட இவர், “ஓர் ஆணாகப் பல வழிகளில் எனக்கும் கண் திறவுகோலாக இப்பயிற்சி அமைந்தது. இப்போது, ஆண்களைச் சந்தித்து, அவர்களின் செயல்பாடுகளை எவ்வாறு மாற்றிக்கொள்வது, அதற்கான வழிமுறைகள், ஒரு பிரச்சினையை அணுகும்விதத்தில் உள்ள பல்வேறு கண்ணோட்டங்கள் ஆகியவை குறித்து பேசுகிறேன்,” என்றார் சரத்.

மேலும், “குடும்பம் என்பது ஆண் பெண் இருவரது பொறுப்பும்தான். அதில் பல சவால்களும் சிக்கல்களும் வரலாம். அதனைப் புரிந்து சரிசெய்வது, மரியாதையுடன் செயல்படுவது அவசியம். அதனை உணர்த்தும் திட்டத்தில் பங்களிப்பது மட்டற்ற மகிழ்ச்சி,” என்றார் அவர்.

சமூக முன்னேற்றம், குழந்தைகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவது ஆகியவை தொடர்பில் தொடர்ந்து செயல்பட விருப்பம் உள்ளதாகப் புன்னகையுடன் பகிர்ந்தார் சரத் குமார்.

Read Entire Article