டுயூட் திரைப்பட புரோமோஷன் நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதனிடம் நீங்கள் ஹீரோ மெட்டீரியல் போல இல்லையே எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
Published:2 mins agoUpdated:2 mins ago
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கியிருக்கும் படம் டுயூட். இந்தப் படத்தில் சரத்குமார், மமிதா பைஜு, ஹிருது ஹாரூன், ரோகிணி, ஐஸ்வர்யா சர்மா, டிராவிட் செல்வம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், அக்டோபர் 17 அன்று திரைக்கு வருகிறது. இந்த நிலையில், இந்தப் படத்துக்கான புரோமோஷன் நிகழ்ச்சி நடந்துவருகிறது.
இந்தப் படத்தில் தெலுங்கு புரோமோஷன் நிகழ்வில் பத்திரிகையாளர் ஒருவர் பிரதீப் ரங்கநாதனிடம், ``உங்களைப் பார்க்க ஹீரோ மெட்டீரியல் போலத் தெரியவில்லை.
சரத்குமார், ராதிகா
ஆனால், தொடர்ந்து வெற்றித் திரைப்படங்களையும், ரசிகர்களையும் பெறுகிறீர்கள்.
உங்களின் இந்த வெற்றிக்குக் காரணம் உங்களின் கடின உழைப்பு எனச் சொல்லலாமா?" எனக் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க பிரதீப் ரங்கநாதன், சில வினாடிகள் எடுத்துக்கொண்டபோது, நடிகர் சரத்குமார் பிரதீப் ரங்கநாதனிடமிருந்து மைக்கை வாங்கி, ``நான் இந்தத் துறையில் நீண்ட காலமாக இருக்கிறேன். 170 படங்களில் நடித்துள்ளேன்.
எப்போதும் A முதல் Z வரை ஹீரோ மெட்டீரியல் என யாரையும் சொல்ல முடியாது. அனைவரும் ஹீரோக்கள்தான்.
ஒரு ஹீரோவைப் போல தோற்றமளிக்க... ஒரு ஹீரோவுக்கான எந்த வரையரையும் இல்லை. சமூகத்திற்கு நன்மை நடக்கும் செயல்களைச் செய்பவரே ஹீரோ” என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதீப் ரங்கநாதன், ``கடின உழைப்பு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக எனக்குக் கிடைத்து வரும் அன்பைப் பற்றி நான் யோசித்து வருகிறேன்.
என்னைப் போன்ற திறமையானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் பார்த்திருக்கிறேன். மக்கள் என்னில் தங்களைப் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
அவர்கள் திரையைப் பார்க்கும்போது, அவர்கள் தாங்களே ஹீரோ என்று உணர்கிறார்கள். அவர்களே அதில் நடிக்கிறார்கள். காதல் செய்கிறார்கள், சண்டை போடுகிறார்கள்.
எனவே, அவர்கள் என்னில் தங்களைப் பார்க்கும்போது, நான் ஹீரோவாகிறேன்” என்றார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகா, ``இது என்ன மாதிரியான கேள்வி? சரத்குமார் உங்களின் பதில் சிறப்பாக இருந்தது.
நன்றாகச் சொன்னீர்கள். பிரதீப், உங்களுக்கு இன்னும் நிறைய ஆற்றல் இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.