சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது. பண்டிகைக் கால தேவை, அமெரிக்க-சீன வர்த்தகப் போர் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு போன்ற சர்வதேச மற்றும் உள்ளூர் காரணிகளால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
மென்மேலும் உயரும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கமும் வெள்ளியும் இன்று வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளன. இன்று (அக்டோபர் 15) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11,860-க்கும், ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனையாகிறது. நேற்று ஒப்பிடும்போது சவரனுக்கு ரூ.280 மற்றும் கிராமுக்கு ரூ.35 உயர்வு பதிவாகியுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.207-க்கும், ஒரு கிலோ பார் ரூ.2,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சந்தோஷம் தரும் பண்டிகை காலம்
பண்டிகைக் காலம் தொடங்கியுள்ளதால் தங்கத்திற்கு நாட்டின் பல நகரங்களிலும் தேவை பெரிதும் உயர்ந்துள்ளது. நவராத்திரி, தீபாவளி, திருமண சீசன்கள் ஆகியவற்றுடன் நகை விற்பனை மையங்களில் கொள்முதல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் உள்ளூர் விலை உயர்வை ஆதரித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பதற்ற நிலைமைகள் இதற்குக் காரணமென நிபுணர்கள் கூறுகின்றனர்.
எல்லாத்துக்கும் அமெரிக்கா
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக மோதல், அமெரிக்க வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்பு மற்றும் மத்திய கிழக்கு பகுதி அரசியல் பதற்றம் ஆகியவை தங்கத்தை ஒரு பாதுகாப்பான சொத்தாக மாற்றியுள்ளது. இதனுடன் டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு சரிவும் இறக்குமதி செலவினத்தை உயர்த்தி விலையை மேலும் தள்ளியுள்ளது. சர்வதேச காரணிகளும் உள்ளூர் தேவையும் இணைந்து தங்கம், வெள்ளி சந்தையில் தொடர்ந்தும் உயர்வை உருவாக்கியுள்ளது. விலை மேலும் உயரும் வாய்ப்புகள் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.