Last Updated:May 13, 2026 11:08 AM IST
100வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரு நாள் முழுவதும் மக்களுக்கு இலவசமாக பருத்திப்பால் வழங்க உள்ளதாக உரிமையாளர் சந்தானம் அறிவித்துள்ளார்.

News18
மதுரை என்றாலே கோவில்கள், கலாச்சாரம் மட்டுமல்ல... நாக்கை நரம்பேற்றும் உணவுகளின் நகரம் என்ற பெருமையும் தனியாக உண்டு. மணக்கும் இட்லி, ஜிகர்தண்டா, காரி தோசை, பரோட்டா முதல் இரவு நேர தெரு உணவுகள் வரை, உணவுப் பிரியர்களின் மனதை கொள்ளை கொள்ளும் நகரமாக மதுரை இன்று வரை திகழ்ந்து வருகிறது.
அந்த மதுரையின் சுவை மரபை தலைமுறைகள் கடந்து காத்து நிற்கும் ஒரு பெயர் தான் திருமலை மடை கருப்பசாமி பருத்தி பால் கடை. மதுரை முனிச்சாலை பகுதியில் அமைந்துள்ள இந்த கடை, சுமார் 97 ஆண்டுகளாக மக்களின் நெஞ்சிலும் நாக்கிலும் இடம்பிடித்திருக்கிறது.
பிரிட்டிஷ் காலத்தில், 1930ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கடையை தற்போது இரண்டாம் தலைமுறையாக 67 வயதான சந்தானம் நடத்தி வருகிறார். “என் அப்பா ஆரம்பித்த இந்த கடை இன்று நூறாவது ஆண்டை நோக்கி பயணம் செய்கிறது என்பதே எனக்கு பெருமை,” என்று உணர்ச்சியுடன் கூறுகிறார் அவர்.
“1957ஆம் ஆண்டு பிறந்த நான் படிக்க முடியாத சூழ்நிலை காரணமாக, என் அப்பாவின் தொழிலையே தொடர்ந்தேன். அப்பாவிடம் கற்ற கைப்பக்குவம் தான் இன்று வரை இந்த பருத்திப்பாலின் ரகசியம். இயற்கையான கருப்பட்டி சேர்த்து தயாரிக்கும் இந்த பருத்திப்பால் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது,” என்கிறார் சந்தானம்.
மேலும், “இந்த தொழிலை நான் ஒரு வியாபாரமாக அல்ல, சேவையாகத்தான் செய்து வருகிறேன். கடந்த 97 ஆண்டுகளாக போதுமான அளவுக்கு மட்டும் தயாரித்து, இன்று வரை வெறும் 20 ரூபாய்க்கே விற்பனை செய்து வருகிறேன்,” என அவர் பெருமையுடன் தெரிவிக்கிறார். காலை 10 மணி முதல் இரவு 8 அல்லது 9 மணி வரை இயங்கும் இந்த கடையில், பருத்திப்பாலுடன் கம்பங்கூழ், கேப்பைக் கூழ், மோர் போன்ற ஆரோக்கியமான பாரம்பரிய பானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
“என் அப்பா தொடங்கிய இந்த தொழில் இத்தனை ஆண்டுகள் நீடித்ததற்கு காரணம் மதுரை மக்கள் தான். அதனால், எங்கள் கடை 100வது ஆண்டை எட்டும் நாளில், ஒரு நாள் முழுவதும் மதுரை மக்களுக்கு இலவசமாக பருத்திப்பால் வழங்க முடிவு செய்துள்ளேன்,” என்று கண்களில் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் மதுரையின் பருத்திப்பால் ஜாம்பவான் சந்தானம். காலம் மாறினாலும், சுவையும் மனிதநேயமும் மாறாமல் இருந்தால் மக்கள் மனதில் இடம் நிலைத்திருக்கும் என்பதற்கு, இந்த 97 வருட பழமையான பருத்திப்பால் கடையே சாட்சியாக திகழ்கிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
First Published :
May 13, 2026 11:08 AM IST
.png)








English (US) ·