" திமுக ஆட்சியில் "நிர்வாகம்" என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது"- எடப்பாடி பழனிசாமி
Published:Just NowUpdated:Just Now

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த TNPSC குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த தேர்வுத் தேதி எப்போது என பின்னர் அறிவிக்கப்படும் என்று TNPSC நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி
திமுக ஆட்சியில் நிர்வாகம்...
அந்தவகையில் இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் பதிவில், " திமுக ஆட்சியில் "நிர்வாகம்" என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
TNPSC குரூப்- 2 போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. அதுவும், பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே தெரியாமல் தேர்வு எழுதியுள்ளனர் என்ற பேரதிர்ச்சியான செய்திகளும் வருகின்றன.
குரூப்- 2 என்பது எவ்வளவு முக்கியமான தேர்வு?
“Technical Fault” என ஒற்றை வரியில் தப்பிக்க முயலுகின்ற திமுக ஆட்சியாளர்கள் , குரூப்- 2 என்பது எவ்வளவு முக்கியமான தேர்வு? அந்த Fault- ற்கு பின்னால் தேர்வெழுதிய இளைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பும் நம்பிக்கையும் சிதைந்துள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.
தமிழ்நாட்டை "சூப்பர்ஸ்டார்" மாநிலமாக மாற்றிவிட்டதாக வாய்கிழிய மேடையில் பேசும் பொம்மை முதல்வர் ஸ்டாலின் அவர்களே - ஒரு தேர்வைக் கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத கையாலாகாத அரசு தான் உங்கள் திமுக அரசு.
ஏற்கனவே 5.5 லட்சம் வேலைகளைத் தரப்போகிறோம் என 2021-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எல்லாம் காற்றில் பறந்துக்கொண்டு இருக்க, இருக்கின்ற தேர்வுகளைக் கூட ஒழுங்காக நடத்த வக்கற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்" என்று தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்.
அண்ணாமலை
ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும்!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் பதிவில், " இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வுகள், தேர்வு மையங்களை அமைப்பதில் திமுக அரசு செய்த குளறுபடியால் ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்ய முடியாத கையாலாகாத நிலையில், திமுக அரசு செயல்பட்டு வருகிறது. அரசுப் பணிகளுக்காக, பல ஆண்டு காலம் கடுமையாக தங்கள் உழைப்பைக் கொடுத்து, தேர்வு மையங்களுக்குச் சென்ற இளைஞர்களின் கனவு பறிக்கப்பட்டுள்ளது.
இத்தனை ஆண்டு காலம் இல்லாத இந்தக் குளறுபடி, லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கும் வரலாறு கொண்ட திமுக அமைச்சர்களால் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. லஞ்சம் ஊழல் நிறைந்த, நிர்வாகத் திறனற்ற கையாலாகாத அரசை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக இளைஞர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டிருக்கும் பதிவில், "அடிப்படை ஏற்பாடுகளைக் கூட செய்யாததால் டி.என்.பி.எஸ்.சி தொகுதி 2 தேர்வுகள் ரத்து: போட்டித் தேர்வை நடத்தக் கூட திமுக அரசுக்கு துப்பு இல்லை!தேர்வு மையங்கள் மற்றும் அவற்றில் தேர்வு எழுதும் தேர்வர்களை ஒதுக்கீடு செய்வதை டி.என்.பி.எஸ்.சியில் இளநிலை உதவியாளர் நிலையில் உள்ள பணியாளரே தெளிவாக செய்ய முடியும்.
ஆனால், டி.என்.பி.எஸ்.சி தலைவர், செயலாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி என 3 இ.ஆ.ப. அதிகாரிகளும், 6 உறுப்பினர்களும் மேற்பார்வையிட்டும் கூட இவ்வளவு குளறுபடிகள் நிகழ்ந்திருக்கின்றன என்றால், டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

அன்புமணி ராமதாஸ்
மிகச்சாதாரணமான ஒரு போட்டித் தேர்வைக் கூட குளறுபடிகள் இல்லாமல் நடத்துவதற்கு முடியாத நிலையில் தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
இந்த குளறுபடிகளுக்கு இளநிலை அதிகாரிகளை பலிகடா ஆக்குவதை விடுத்து, இது குறித்து விசாரணை நடத்தி டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தின் உயர்பொறுப்பில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறார்.
.png)






English (US) ·