ஜப்பானில் வாக்குப்பதிவு; தக்காய்ச்சிக்கு வெற்றி வாய்ப்பு

2 hours ago 19

9d1d302a-1680-4827-9d86-743247f290df

கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் மக்கள் வாக்களித்து வருகின்றனர். - EPA

தோக்கியோ: ஜப்பானில் கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) மக்கள் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தனர்.

இந்தத் தேர்தலில் தற்போதைய பிரதமர் சானே தக்காய்ச்சி வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

பத்து ஆண்டுகளுக்கு மேலாக இடைவிடாமல் ஆட்சி செய்து வரும் தக்காய்ச்சியின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்டிபி), 465 உறுப்பினர்களைக் கொண்ட கீழவையில் பெரும்பான்மைக்குத் தேவையான 233 இடங்களைவிட அதிகமாக கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பனிப்பொழிவு வெண்ணிறப் போர்வை போர்த்தியதுபோலக் காட்சியளிக்கிறது. வாக்கெடுப்பு நாளிலும் பனிப்பொழிவு கடுமையாக இருந்தது.

“நான் வாக்களிப்பது முக்கியம். அப்போதுதான் அரசியலில் முறையாக நாங்களும் பங்கேற்க முடியும்,” என்று தோக்கியோவில் வாக்களிப்பு நிலையத்துக்கு அருகே தன்னை கோண்டோ என்று குறிப்பிட்ட 50 வயது மாது ஏஎஃப்பி செய்தியிடம் தெரிவித்தார்.

“பனி கொட்டினாலும் வாக்களித்தாக வேண்டும்,” என்றார் அவர்.

பனி மூடியிருந்ததால் வாக்குப் பெட்டிக்குச் செல்லும் பாதையைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டதாக வடக்கு ஜப்பானில் 70களில் இருந்த ஆமோரி என்பவர் என்எச்கே ஒளிபரப்பில் தெரிவித்தார்.

பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவுமிக்க பிப்ரவரியில் ஜப்பானிய பொதுத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தல், 2017க்கும் பிறகு எல்டிபிக்கு மாபெரும் வெற்றியாக அமையும் என்று நம்பப்படுகிறது. காலஞ்சென்ற ஷின்சே அபே இதே போன்ற வெற்றியை இதற்கு முன்னர் சாதித்திருந்தார்.

தக்காய்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ஆதரவும் உள்ளது.

வாக்களிப்பு இரவு 8 மணியுடன் (சிங்கப்பூர் நேரப்படி மாலை 7 மணி) நிறைவடைந்தது. முன்னோட்டத் தகவல்களின்படி, வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களில் 26.1 விழுக்காட்டினர் வாக்களித்ததாக நிக்கி ஏஷியா செய்தி தெரிவித்தது.

வாக்கு நள்ளிரவு வரையில் எண்ணப்பட்டு திங்கட்கிழமை (பிப்ரவரி 9) முடிவுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய எல்டிபியின் தலைவரும் பிரதமருமான தக்காய்ச்சி, இரும்புப் பெண்மணி என்றழைக்கப்பட்ட பிரிட்டனின் மறைந்த மார்கரெட் தாட்சரை முன்னுதாரணமாகக் கொண்டவர். கடந்த அக்டோபரில் எல்டிபியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அதே சூட்டோடு, தைவானைப் பாதுகாக்க படைகளை அனுப்புவோம் என்று கூறி அவர் சீனாவை சீண்டினார். தைவானைச் சொந்தம் கொண்டாடும் சீனா, இதனால் கோபமடைந்த ஜப்பானை பல்வேறு வழிகளில் மிரட்டியது. ஆனால் அவற்றை தக்காய்ச்சி ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

Read Entire Article