Last Updated:Feb 08, 2026 1:25 PM IST
TNPSC குரூப்-2, 2A தேர்வுகள் தேர்வு மைய குளறுபடியில் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதை எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.

தேர்வு மைய ஒதுக்கீடு குளறுபடியால், தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் "நிர்வாகம்" என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை , இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
டிஎன்பிஎஸ்சி குரூப்2 போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. அதுவும், பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே தெரியாமல் தேர்வு எழுதியுள்ளனர் என்ற பேரதிர்ச்சியான செய்திகளும் வருகின்றன,
“Technical Fault” என ஒற்றை வரியில் தப்பிக்க முயலுகின்ற திமுக ஆட்சியாளர்கள் , குரூப்- 2 என்பது எவ்வளவு முக்கியமான தேர்வு? அந்த Fault- ற்கு பின்னால் தேர்வெழுதிய இளைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பும் நம்பிக்கையும் சிதைந்துள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். ஏற்கனவே 5.5 லட்சம் வேலைகளைத் தரப்போகிறோம் என 2021-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எல்லாம் காற்றில் பறந்துக்கொண்டு இருக்க, இருக்கின்ற தேர்வுகளைக் கூட ஒழுங்காக நடத்த வக்கற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2A தேர்வு குளறுபடிகளை அதிகாரிகள் மீது மட்டும் சுமத்தி , அவர்கள் மீது மட்டும் கண்துடைப்பு நடவடிக்கை எடுக்காமல் , இந்த தவறுகள் எதிர்காலத்தில் வராமல் இருக்க முறையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்பட அரசுத் துறைகளில் காலியாக உள்ள 828 பணியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் இன்று நடைபெறுவதாக இருந்தது. சென்னையில் ஏழு மையங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 38 மையங்களில் தேர்வு நடைபெற இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தேர்வு மைய ஒதுக்கீடு குளறுபடியால் தேர்வு எழுதச் சென்ற பலரின் பதிவு எண் இல்லாததால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர். தேர்வு மையங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாகக் குற்றம்சாட்டி நூற்றுக்கணக்கானோர் தேர்வு மையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து அரும்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்களுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று, மாநிலம் முழுவதும் குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். வரும் 22-ஆம் தேதி குரூப் 2 பதவிகளுக்கான பாடத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.
Location :
Chennai,Tamil Nadu
TNPSC : "தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை" குரூப் 2 தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு ஈபிஎஸ் கண்டனம்
.png)






English (US) ·