TVK Keerthana: சிவகாசியின் முதல் பெண் எம்எல்ஏ டூ தமிழ்நாடு அமைச்சர்... யார் இந்த கீர்த்தனா?

1 hour ago 13

Last Updated:May 10, 2026 1:54 PM IST

தவெக-வின் முதலமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் மற்றும் மிக இளைய அமைச்சர் (29 வயது) என்ற பெருமையை கீர்த்தனா பெற்றுள்ளார்.

கீர்த்தனா
கீர்த்தனா

சிவகாசி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 29 வயதான கீர்த்தனாவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளித்ததால் கட்சியின் பலம் 120 ஆக உயர்ந்தது. இதையடுத்து, தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன்படி, சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கியது.

விஜய், தற்போது முதலமைச்சராகியுள்ள நிலையில், காவல் மற்றும் உள்துறை, பொது நிர்வாகம் ஆகியவற்றை தன்வசம் வைத்துக் கொள்ள உள்ளார். அவருடன் அவருடன் 9 பேர் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டனர். அந்தவகையில் முதல் அமைச்சர் விஜயின் அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சரானார் கீர்த்தனா. இவரது பின்னணி பற்றி தெரிந்து கொள்ளலாம்.

யார் இந்த எஸ்.கீர்த்தனா?

விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியாபட்டியை சேர்ந்த சம்பத் என்பவரின் மகள் கீர்த்தனா. 29 வயதான இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணிதமும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை புள்ளியியலும் முடித்திருக்கிறார். இன்னும் திருமணம் ஆகாதவர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய பன்மொழி புலமை கொண்ட இவர் நேரடி அரசியலுக்கு வருவதற்கு முனபு அரசியல் ஆலோசகராகப் பணியாற்றினார். பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்தில் இணைந்து திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் பின்னணியில் இருந்து செயல்பட்டார்.

ஆந்திராவில் தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் அரசியல் ஆலோசனை குழுவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இதைத்தொடர்ந்து தவெகவில் இணைந்து நேரடி அரசியலில் பயணத்தை தொடங்கி, சிவகாசி சட்டமன்றத்தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த தொகுதியில் இரண்டு முறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, மீண்டும் போட்டியிட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசோகன் என இரு பெறும் சவால் மிகுந்த வேட்பாளர்களுக்கு மத்தியில் போட்டியிட்டு 11,670 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

57,039 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் இரண்டாம் இடத்தையும் 51,078 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இந்தநிலையில் முதலமைச்சர் விஜயின் அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சரானார் கீர்த்தனா. இவர் அமைச்சரவையிலும் சட்டப்பேரவையிலும் மிக இளம் வயது உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Location :

Sivakasi,Virudhunagar,Tamil Nadu

Read Entire Article