ஃபேரர் ரோடு சாலை புதைகுழி: நிறுவனத்திற்கு $84,000 அபராதம்

1 hour ago 7

a966bdc6-096c-481a-9f0b-5d845c871d86

2022 நவம்பரில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் காரணமாக ஃபேரர் சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த 2022ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஃபேரர் ரோட்டில் ஏற்பட்ட புதைகுழி சம்பவத்திற்குக் காரணமான ‘நிஷிமாட்சு கொன்ஸ்ட்ரக்ஷன்’ எனும் ஜப்பானியக் கட்டுமான நிறுவனத்திற்கு $84,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் நேர்ந்த கவனக்குறைவு மற்றும் விதிமீறல்களை நிறுவனம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அரசு நீதிமன்றம், வெள்ளிக்கிழமை (ஜூலை 24) இந்தத் தீர்ப்பை வழங்கியது.

ஹாலந்து ரோட்டிலிருந்து ஃபேரர் ரோடு நோக்கிச் செல்லும் இணைப்புச் சாலையில், 2022 நவம்பர் 15ஆம் தேதி திடீரெனப் பிரம்மாண்ட புதைகுழி ஏற்பட்டது.

அந்தப் பகுதியில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் பராமரிப்பில் இருந்தபோது, அதன் முன்புற நிலப்பகுதி நிலைதடுமாறியதால் சாலை உள்வாங்கியது. இதனால் அந்தப் பாதையில் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொதுப் பயனீட்டுக் கழகத்தின் ஆழ் சுரங்க வடிகால் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக இந்த நிறுவனம் சுரங்கம் தோண்டும் வேலையில் ஈடுபட்டிருந்தது.

அப்போது, கட்டடக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட கட்டடப் பணி அனுமதிப் பத்திர நிபந்தனைகளை நிறுவனம் சரியாகப் பின்பற்றவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது.

அனுமதிக்கப்பட்ட கட்டட வரைபடத் திட்டத்திலிருந்து நிறுவனம் மாறுபட்டுச் செயல்பட்டது. சுரங்கம் தோண்டும்போது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டிய முக்கியமான இயக்க அளவீடுகளை நிறுவனம் மதிப்பாய்வு செய்யத் தவறியது.

மேலும், உரிய நேரத்தில் நிலத்தின் மேற்பரப்பில் செய்ய வேண்டிய ஆய்வுத் துளையிடுதல் மற்றும் சாந்து பூசி நிலத்தைப் பலப்படுத்தும் பணிகளையும் அது செய்யவில்லை.

நிறுவனத்தின் இந்தத் தொடர் தவறுகளால் எட்டு மீட்டர் நீளமும், நான்கு மீட்டர் அகலமும், மூன்று மீட்டருக்கும் அதிகமான ஆழமும் கொண்ட புதைகுழி சாலையில் உருவானது. நீதிமன்றத்தில் நிறுவனம் தன் மீதான மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டது.

திட்டப் பகுதியின் நிலத் தன்மையைச் சரியாக மதிப்பிடத் தவறியது, கட்டட அமைப்புக் கண்காணிப்பை முறையாகச் செய்யாதது ஆகியவை இவர்கள் மீதான முதன்மைக் குற்றச்சாட்டுகளாகும். இவர்களுக்கான நீதிமன்ற விசாரணை வரும் ஜூலை 31ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Read Entire Article