லக்னோவில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கான மாநாட்டில் தந்தை பெரியார்
13.10.1968
அக்டோபர் 1968 ஆம் ஆண்டு, தமது 90ஆவது வயதில் தந்தை பெரியார் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கான மாநாட்டில் கலந்துகொண்டார். சமுதாய இழிவை நீக்குவதே தமது இறுதி லட்சியம் என அவர் இந்த மாநாட்டில் ஆற்றிய உரையில் முழங்கினார்.
மாநாட்டிற்கு வருகை புரிந்த தந்தை பெரியாருக்கு, மக்கள் “பெரியார் ராமசாமி ஜிந்தாபாத்! நாய்க்கர் சாஹேப் ஜிந்தாபாத்!” என்று முழக்கமிட்டு பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தனர்.
மாநாட்டின் வரவேற்புக் குழுச் செயலாளராக இருந்த வழக்குரைஞர் ஜனாப் ஆசாத் ஹுசேன், மலர்மாலை அணிவித்து பெரியாரை வரவேற்றார். மேலும், குடியரசுக் கட்சியின் தொண்டர்கள் கான்பூரில் வாளுடன் பெரியாருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
இந்த மாநாட்டில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 30 மாவட்டங்களிலிருந்து 350 பிரதிநிதிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் திரண்டிருந்தனர். வரவேற்புக் குழுத் தலைவர்: முகம்மது மஸ்தான் சாருல்லா சிறப்பு வருகை: புத்தபிக்கு சியாம் சுந்தர்
பெரியாரின் உரை: மானமுள்ள வாழ்வே இலக்கு மாநாட்டைத் தொடங்கி வைத்து தந்தை பெரியார் உரையாற்றினார். அவரது தமிழ் உரையை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க, மற்றொருவர் அதனை இந்தியில் மொழி பெயர்த்து வழங்கினார். பெரியார் ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதில் அவர், தமது லட்சியம் சமுதாய இழிவை நீக்குவதுதான் என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார்.
“எனது லட்சியமெல்லாம் எந்தக் காரியம் செய்தாவது நமது சமுதாயத்தின் இழிவு நீக்கப்படவேண்டும் என்பது தான். அது ஜப்பானால் முடியுமா? ஜெர்மனால் முடியுமா? ரஷ்யாவினால் முடியுமா? பாகிஸ்தானால் முடியுமா? என்பதுபற்றி இன்றைய நிலையில் நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை. யாரால் முடியுமோ அவர்களை அழைத்து நம் ஆட்சியை அவர்களிடம் ஒப்படைத்து அதில் இழிவற்ற குடிமகனாக இருக்கலாம் என்பதே என் கருத்து. அவர் மேலும் கூறுகையில், சமுதாய இழிவோடு வாழ்வதைவிட, போராட்டத்திற்கு ஆளாகி இறந்து போவது நல்லது என்றும், “மானமுள்ள வாழ்வே மனிதனுக்கு அழகு” என்றும் வலியுறுத்தினார். அபாயகரமாகத் தோன்றினாலும், சமுதாய இழிவை ஒழிக்கப் போராடுவதே சிறந்தது என்ற அவரது தீவிர நிலைப்பாட்டை இந்த உரை வெளிப்படுத்தியது.