அறுவைச் சிகிச்சைப் பிழையைச் சரிசெய்ய மருத்துவர் முயலவில்லை: மரண விசாரணை அதிகாரி

21 hours ago 19

2ea83950-4c97-4567-a49d-15b353f8dc46

டாக்டர் ஃபோங் தவறான ரத்த நாளங்களை வெட்டியதால் வயிற்றுப்பகுதி உறுப்புகளில் ரத்த ஓட்டம் தடைப்பட்டது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ராஃபிள்ஸ் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மருத்துவர் நோயாளியின் சிறுநீரகத்திலிருந்து கட்டி ஒன்றை அகற்றிக்கொண்டிருந்தபோது, தவறுதலாக அவரது ரத்த நாளங்களை வெட்டித் துண்டித்தார்.

இந்தப் பிழையால் அந்த நோயாளி உயிரிழந்தார். நடந்தது குறித்த ஆதாரங்களைத் தர மருத்துவர் முன்வரவில்லை என்றும், நடந்தது பற்றிய உண்மையற்ற விளக்கங்களை அளித்திருந்தார் என்றும் அரசு மரண விசாரணை அதிகாரி ஆடம் நக்கோடா (Adam Nakhoda) தெரிவித்தார்.

சிறுநீரில் ரத்தம் இருந்ததாக 63 வயதுப் பெண் நோயாளி கூறியதை அடுத்து, அவருக்கு 7.5 சென்டிமீட்டர் அகலக் கட்டி இருந்தது சோதனையில் தெரியவந்தது. அதன் பிறகு டாக்டர் ஃபோங் யென் கிட் என்ற சிறுநீரக அறுவைச் சிகிச்சை நிபுணர், அந்த மூதாட்டிக்குச் சிகிச்சை அளித்தார்.

2022 ஏப்ரல் 29ல் அறுவைச் சிகிச்சை நடந்தது. டாக்டர் ஃபோங் தவறான ரத்த நாளங்களை வெட்டியதால் வயிற்றுப்பகுதி உறுப்புகளில் ரத்த ஓட்டம் தடைப்பட்டது. இதனை அடுத்து அந்த நோயாளி மே 2ல் காலமானார்.

நவம்பர் 2025ல் நடத்தப்பட்ட மரண விசாரணையின்போது, சிகிச்சையின் இடையில் தவறு நேர்ந்ததாக டாக்டர் ஃபோங் அறிந்ததும் 13 நிமிடங்கள் சிகிச்சையை நிறுத்தி வைத்திருந்தது தெரியவந்தது. ஆனால் அவர் தவற்றை ஒப்புக்கொள்ளவில்லை; உதவிக்காகவும் அவர் யாரையும் அழைக்கவில்லை.

“சிறுநீரகத்துடன் நேரடித் தொடர்பு இல்லாத பல பெரிய ரத்தக்குழாய்கள் கட்டப்பட்டுத் துண்டிக்கப்பட்டிருப்பதை, தகுதியான எந்தவோர் அறுவைச் சிகிச்சை நிபுணரும் அந்நேரமே தெரிந்திருக்க வேண்டும்,” என்று மரண விசாரணை அதிகாரி கூறினார்.

“நோயாளி அறுவைச் சிகிச்சை அரங்கில் இருக்கும்போதே தவறைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பு இருந்தும், கண் முன்னே தெரிந்த அறிகுறிகளைப் புறந்தள்ளிவிட்டு நிலைமையைச் சீர்படுத்த முயலாதது, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது,” என்றும் அவர் கூறினார்.

‘சிடி ஸ்கேன்’ வழியாகப் பிழைகளை உறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதங்களும், ரத்த நாள நிபுணரை அழைக்காமல் இருந்ததும் மன்னிக்க முடியாதவை என்றும், அவை நோயாளியின் இறப்புக்குப் பங்களித்திருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

இந்தப் பிழை முன்னதாகவே அடையாளம் காணப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தால், அதற்கான உடனடி தீர்வுகள் மேற்கொள்ளப்பட்டு நோயாளி பிழைத்திருக்கலாம் என்று விசாரணை அதிகாரி கூறினார்.

மரணத்தில் எந்தச் சூதும் நேரவில்லை எனத் தெரிவித்த அதிகாரி, அறுவைச் சிகிச்சையின் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மருத்துவத் தவறே நோயாளியின் இறப்புக்குக் காரணம் என்று குறிப்பிட்டார்.

டாக்டர் ஃபோங் ராஃபிள்ஸ் மருத்துவமனையின் நிபுணராகத் தொடர்ந்து அதன் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Read Entire Article