ஆசியாவைக் காலியாக வலம்வரும் கத்தார் சரக்குக் கப்பல்கள்

1 hour ago 12

99e732d6-7513-4c93-bfd2-344aa4888880

ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் கத்தாரின் சரக்குக் கப்பல்கள் காலியாகச் சுற்றுக்கொண்டிருக்கின்றன. - படம்: டோஹா நியூஸ்

டோஹா: கத்தாருக்குச் சொந்தமான 50க்கும் அதிகமான சரக்குக் கப்பல்கள் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் சுற்றிக்கொண்டிருப்பதாகப் புளூம்பர்க், கெப்லேரபாகிய ஆகியவற்றின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவைச் சுமந்துசெல்லும் அந்தக் கப்பல்கள் தற்போது வெறுமையாக உள்ளன.

மத்திய கிழக்குப் போரால் கத்தாரின் ஏற்றுமதி ஆலையும் ஹோர்முஸ் நீரிணையும் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால் சரக்குக் கப்பல்கள் ஆசியாவில் சுற்றிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

மேற்கு இந்தியா, இலங்கை, மலாக்கா நீரிணையின் வடக்கு நுழைவாயில், சிங்கப்பூருக்குக் கிழக்கில் உள்ள நீர்ப்பகுதி ஆகியவற்றில் கத்தாரின் சரக்குக் கப்பல்களைக் காண முடிகிறது.

அவற்றில் ஒரு கப்பலில்கூட திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இல்லை என்பதைத் தரவுகள் காண்பிக்கின்றன.

மார்ச் தொடக்கத்தில் ஆளில்லா வானூர்தி மூலம் ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து உலகின் ஆகப் பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதி ஆலையைக் கத்தார் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

அனைத்துலக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதியாளர்கள் குழுமத்தின்படி, உலக அளவில் 800க்கும் அதிகமான சரக்குக் கப்பல்கள் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவைச் சுமந்துசெல்கின்றன.

இதற்கிடையே, எண்ணெய் போக்குவரத்துக்கு உலகளவில் மிகவும் முக்கிய மையப்புள்ளியாக உள்ள ஹோர்முஸ் நீரிணை, ஈரான் போரில் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்று ஐக்கிய அரபுச் சிற்றரசு அதிகாரி அன்வார் கார்கே‌ஷ் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் தலைவரின் அரசதந்திர ஆலோசகரான திரு கார்கே‌ஷ், ஹோர்முஸ் நீரிணையை வைத்து பேரம்பேசுவது வட்டார ரீதியான பிரச்சினை அல்ல, அனைத்துலகப் பொருளியல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விவகாரம் என்றார்.

“எந்த ஒரு நாடும் ஹோர்முஸ் நீரிணையைப் பிணைப்பிடிக்கக்கூடாது,” என்ற திரு கார்கே‌ஷ், சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது ஒரு தெளிவான உடன்பாடாக இருக்கவேண்டும் என்றார்.

போர் முடிவுக்கு வரவேண்டும் என்பதை ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் விரும்புவதாகவும் குறிப்பிட்ட திரு கார்கே‌ஷ், போருக்கான மையப்புள்ளிக்குத் தீர்வுகாணாமல் வெறுமனே சண்டை நிறுத்தத்தை அமல்படுத்துவது அபாயகரமானது என்று எச்சரித்தார்.

Read Entire Article