ஆசிரியர் விடையளிக்கிறார்

18 hours ago 15

கேள்வி : பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வு நுழைவா? என்று ஒன்றிய அரசைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் தமிழ்நாடெங்கும் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் (31.01.2026) ஓங்கி ஒலித்த கண்டனக் குரலுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்குமா?

– ப.யுவராணி, படப்பை.

பதில் :  செவி சாய்க்காது எளிதில்! ஆனால், நாம் செவி சாய்க்க வைப்போம் – வைக்க வேண்டும் – மக்கள் மன்றத்தின் எழுச்சி முக்கியம் – அதனை ஆயத்தப்படுத்துவது நம் கடமை.

கேள்வி : இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (அய்அய்எம்எஸ்) ஆசிரியர் பணியிடங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.யினருக்கு ஆசிரியர் பணி வாய்ப்பு பல இடங்களில் சுழியமாகவும், சில இடங்களில் ஒற்றை இலக்கமாகவும் உள்ள கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் – இனியாவது ஒன்றிய அரசு சமூகநீதியை நிலைநாட்டுமா?

– கு.கணேஷ், கடப்பாக்கம்.

பதில் :  மூர்க்கத்தனமும், முதலைப் பிடிவாதமும் கொண்ட ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மோடி ஒன்றிய அரசு என்றும் சமூக நீதிக்குப் பிறவி எதிரியே. இப்போது மட்டுமல்ல. மக்கள் உணர்வுகள்தான் தக்க பதில் – அதனை உருவாக்கியாக வேண்டும்.வாக்கு வங்கிக் கண்ணோட்டத்தில் இவர்கள்தான் பெரும்பான்மை. ஆனால், ஒன்றுபட்டு நிற்கவில்லையே. அதுதான் வேதனைப்பட வேண்டிய வெட்கக்கேடு! – இல்லையா?

கேள்வி :  “மாநிலத்தில் சுயாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி” எனும் கொள்கையை ‘திராவிட மாடல்’ அரசு தனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் உணர்த்திக்கொண்டே இருந்தாலும், ஒன்றிய அரசு பாராமுகமாய் இருப்பது ஏன்?

 – ஆர்.பூபதி, தருமபுரி.

பதில் : ஆர்.எஸ்.எஸ். கொள்கை தொடக்கத் திலிருந்தே ஒற்றை ஆட்சி. மாநிலங்களே தனித்து ஆட்சி புரியும் கூட்டாட்சித் தத்துவம் அதற்கு ‘ஒவ்வாத’ ஒன்று.ஓநாய் எப்படி ‘சைவமாகும்’? அதன் கொள்கையை ஆட்சி கிடைத்ததால் செயல்படுத்த – இப்படிப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான வேலைகளில் திட்டமிட்டே இறங்கி ஆடுகிறது!

கேள்வி : “தமிழன் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. மாறாக விரும்பிப் படிக்கிறான். அதேநேரம் வேறொரு மொழியை என்மீது திணித்தால் அதை ஒருபோதும் ஏற்கமாட்டேன்” என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் சட்டக் கல்லூரி நிகழ்வில் தெரிவித்திருப்பதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

– ச.அறிவழகன், பாலக்கோடு.

பதில் :  பாராட்டி வரவேற்க வேண்டிய கருத்து.

கேள்வி : பிப்ரவரி 21இல் தஞ்சாவூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில இளைஞரணி-மாணவர் கழகம் மற்றும் மகளிரணி, மகளிர் பாசறை மாநாட்டிற்காக கண்களைப் பளிச்சிடும் வண்ணம் ஆங்காங்கே காணப்படும் சுவரெழுத்து விளம்பரங்கள் மாநாட்டிற்கான வெற்றிக்கு அச்சாரமா?

– த.ஆகாஷ், அரூர்.

பதில் :  தஞ்சை ‘கழகத்தின் நஞ்சை!’  எப்போதும் தமிழ்நாடு முழுவதிலும் நமது தொடர்ப் பிரச்சாரம் நல்ல விளைவையும், விளைச்சலையும் உருவாக்கியுள்ளது.2026 பிப்.21இல் தஞ்சையில் நேரில் காண வாருங்கள் – குடும்பத்தோடு!

கேள்வி : சி.பி.அய். விசாரணைக்குச் சென்று திரும்பிய பின்னர். பா.ஜ.க.வை நடிகர் விஜய் விமர்சிக்காதது ஏன்?

ஆசிரியர் விடையளிக்கிறார்

– ந.முணியாண்டி, ஆரணி.

பதில் : தனது படத்திற்குத் தணிக்கைத்துறை படுத்தும் பாட்டுக்குப் பிறகும் மவுன சாமியாராகி, தி.மு.க. மீது தேவையற்ற பாய்ச்சல் காட்டும் இவரின் முகத்திரை நாளும் கிழிந்துகொண்டே வருகிறது! “துள்ளுகிற மாடு பொதி சுமக்காது” என்பது மூதுரை!

கேள்வி :  “வருகின்ற (2026) சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி பெறப்போகும் வெற்றி “பா.ஜனதாவை வீழ்த்த முடியும்” என்ற நம்பிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழங்குமா?

– எஸ்.முத்தியாலம்மாள், குரோம்பேட்டை.

பதில் :  நிச்சயமாக – அதில் என்ன சந்தேகம்? இந்தியாவிற்கு முன்னோடி எப்போதும், எதிலும் பெரியார் மண்ணான தமிழ்நாடுதானே!

கேள்வி : சீன ஊடுருவல் பற்றிப் பேச அனுமதி மறுத்ததால், மக்களவையில் அத்துமீறியதாக தமிழ் நாட்டு எம்.பி.க்கள் உட்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு, ஜனநாயகக் குரல் வளை நசுக்கப்பட்டுள்ளது பற்றி…?

– ரேவதி சுதாகர், புதுச்சேரி.

பதில் :  இன்றைய மோடி ஆட்சியில் ஜனநாயகம் எப்போதோ பயந்து ஓடிவிட்டது; பாசிசம் வெற்றிப் புன்னகையோடு அமர்ந்துள்ளது என்பதற்கான சாட்சியே எதிர்க்கட்சித் தலைவருக்குக் கூட வாய்ப்பூட்டு – பேச்சுரிமைத் தடை! – இத்தனைக்கும் பி.ஜே.பி. மைனாரிட்டி அரசு.

கேள்வி : ‘தண்ணீர் திவால்’ நிலைக்கு உலகம் தள்ளப்பட்டிருப்பதாக அய்க்கிய நாடுகள் அவையின் அறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருப்பதற்கு உடனடியானத் தீர்வு என்ன? ஒன்றிய- மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டும்?

– வே.பெருமாள்சாமி, விழுப்புரம்.

பதில் : மாநில அரசும், ஒன்றிய அரசும் இணைக்கமாக, நிலவியல் – நீர்வளம் – ஆராய்ச்சி வல்லுநர்களோடு கலந்து உடனடியாக அதற்குத் தக்க வழிமுறை காண விரைந்து செயல்பட வேண்டும். தரைநீர் கிட்டாத அளவுக்கு சுற்றுச்சூழல் கெடல், வெப்பமயம் போன்றவற்றை எதிர்த்துப் பல்முனைத் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுமாறு மக்களுக்கும் அறிவு கொளுத்திடுதல் அவசியம் – அவசரம்!

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி : திராவிட நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டுள்ள ‘என் கனவு என் எதிர்காலம்’ திட்டம் இளைஞர்கள் தங்கள் கனவுகளை – எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வாய்ப்பு எவ்வாறு அமையும்?

– சீதாலட்சுமி, திண்டிவனம்.

பதில் :  பிரமாதமாக அமையும். குறிப்பாக கிராமத்து முதல் தலைமுறை, ஏழை எளிய நடுத்தர குடும்பத்துப் பிள்ளைகள் எல்லாம் நன்கு தங்களுள் புதைந்துள்ள ஆற்றல்களை – ஆளுமையை வெளிக்கொணர நல்ல வாய்ப்பு!

Read Entire Article