ஆண்டிறுதிக் கொண்டாட்டங்களில் அவசியமாகும் உணவுச் சுகாதாரம்

20 hours ago 12

a1ca130c-df68-4212-ab93-3ae36e8f2411

உணவுச் சுகாதாரம் தொடர்பில் அரசாங்கம் உட்பட உணவைக் கையாள்பவர்கள், சில்லறை வர்த்தகர்கள் போன்ற தரப்பினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் மக்களுக்கும் அதில் அதேயளவு பொறுப்புண்டு. - படம்: பிக்சாபே

தொற்றுநோய் அமைப்பின் உணவு மற்றும் ஒட்டுண்ணிகள் பிரிவுக்கான இயக்குநர் லலிதா குருபாதம்.

தொற்றுநோய் அமைப்பின் உணவு மற்றும் ஒட்டுண்ணிகள் பிரிவுக்கான இயக்குநர் லலிதா குருபாதம். - படம்: தொற்றுநோய் அமைப்பு

கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டங்களை முன்னிட்டுப் பலரும் ஒன்றிணைந்து, சுவையான பல உணவு வகைகளை உண்டு, மகிழ்ந்து குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரம் செலவிடுவது வழக்கம்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் உணவு, தனிப்பட்ட சுகாதாரம் போன்றவை பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன.

சாவ்பாவ் சீன நாளிதழ் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த மூன்று ஆண்டுகளில் சிங்கப்பூரில் உணவு மூலம் பரவும் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூர் உணவு நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி கடந்த ஆண்டு உணவு மூலம் பரவும் நோய்களின் எண்ணிக்கை 100,000 பேருக்கு 22.8 ஆக இருந்தது. இது 2023ஆம் ஆண்டில் 21.9 ஆக இருந்தது என்று சாவ்பாவ் தெரிவித்தது.

விடுமுறைக் காலத்தில் உணவுச் சுகாதாரம், தனிப்பட்ட ஆரோக்கியத்தைப் பேணுவது குறித்துத் தொற்றுநோய் அமைப்பின் உணவு மற்றும் ஒட்டுண்ணிகள் பிரிவுக்கான இயக்குநர் லலிதா குருபாதம் தமிழ் முரசிடம் பேசினார்.

உணவு வெப்பநிலை ஒரு பங்கு வகிக்கிறது

வெப்பநிலை 5 முதல் 60 டிகிரி செல்சியஸ் வரை உள்ள உணவில் பாக்டீரியாக்கள் வேகமாக வளரும்.

அதனால் கொண்டாட்டங்களுக்குச் சமைக்கப்படும் அல்லது வாங்கப்படும் உணவுகளை வெகுநேரம் வெளியே வைத்திருக்கக் கூடாது என்று திருவாட்டி லலிதா அறிவுறுத்தினார்.

“எஞ்சிய உணவைக் குளிர்பதனப் பெட்டியில் வைக்க வேண்டும். சாப்பிடுமுன் வெளியே எடுத்துக் குளிர்ச்சியை நீக்கிய பிறகு சாப்பிடலாம்,” என்றார் அவர்.

உணவின் குளிர்பதத்தை நீக்குவதற்கான மூன்று வழிமுறைகளையும் அவர் பகிர்ந்தார்.

முதலாவது, குளிர்பதனப் பெட்டியில் குளிர்ச்சி சற்றுக் குறைவாக உள்ள பகுதியில் உணவை வைக்கலாம்.

“உங்கள் கொண்டாட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டால் இது பொருந்தும். ஏனெனில் இந்த வழிமுறையைப் பின்பற்றுவதற்கு அதிக நேரம் தேவைப்படும்,” என்றார் திருவாட்டி லலிதா.

இரண்டாவது, நுண்ணலை அடுப்பைப் (Microwave Oven) பயன்படுத்தி உணவின் குளிர்ச்சியை நீக்குவதாகும்.

“இருப்பினும் நுண்ணலை அடுப்புகள் உணவை முழுமையாகச் சூடாக்க முடியாமல் போகலாம்,” என்றும் அவர் எச்சரித்தார்.

இறுதியாக, ஒரு கசிவுத் தடுப்பு பையில் உணவை வைத்து சூடான நீரில் முக்கிக் குளிர்ச்சியை நீக்கலாம்.

உணவை மீண்டும் சூடாக்கும் வழிகள்

குளிர்ச்சி நீங்கிய உணவை மீண்டும் சூடாக்கும்போது உணவு முழுமையாக மீண்டும் சூடாக இருப்பதை உறுதிசெய்து கொள்வது அவசியம்.

“குறைந்தபட்சம் 75 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்கப்படுவதை உறுதிசெய்ய, உணவை அவ்வப்போது கலக்க வேண்டும்,” என்றார் லலிதா.

அத்துடன், உணவை ஒருமுறை மட்டுமே மீண்டும் சூடுபடுத்த வேண்டும் என்றும் சூடான உணவைத் தயாரித்த 4 மணி நேரத்திற்குள் உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“முழுமையான வெப்பம் இல்லாத உணவில் பாக்டீரியா பெருகும்போது அது இரைப்பை குடல் அழற்சியை ஏற்படுத்தும்,” என்றார் அவர்.

மேலும், எப்போதும் சுத்தமான உணவுப் பாதுகாப்புக் கலன்களில் உணவை வைப்பது முக்கியம் என்றும் அவர் கூறினார்.

சமூகப் பொறுப்பு

விடுமுறை நாள்களில் உணவு மூலம் பரவும் நோய்களைத் தடுக்கப் பல தடுப்பு நடவடிக்கைகள் இருந்தாலும் மிக முக்கியமானது சமூகப் பொறுப்பு என்கிறார் லலிதா.

“நோய்வாய்ப்பட்டிருக்கும்போது மற்றவர்களுக்கு உணவு தயாரிப்பதைத் தவிர்ப்பது நன்று,” என்றார் அவர்.

உணவு மூலம் பரவும் நோய்கள் தொடர்பு மூலமாகவும் மாசுபட்ட மேற்பரப்புகள் மூலமாகவும் பரவக்கூடும்.

மேலும், குடும்பங்களில் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், நாள்பட்ட நோய்களால் பலவீனமான நோயெதிர்ப்பாற்றல் கொண்டவர்கள் இருப்பர்.

“எனவே உணவைச் சாப்பிடுவதற்கு அல்லது கையாள்வதற்கு முன்பும், சமைக்காத உணவைக் கையாண்ட பிறகும் கைகளைத் தவறாமல் கழுவுதல் போன்ற தனிப்பட்ட சுகாதாரம் கட்டாயம் ஊக்குவிக்கப்படுகிறது,” என்றார் லலிதா.

உணவுச் சுகாதாரம் தொடர்பில் அரசாங்கம் உட்பட உணவைக் கையாள்வோர், சில்லறை வர்த்தகர்கள் போன்ற தரப்பினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் மக்களுக்கும் அதில் அதேயளவு பொறுப்புண்டு என்று வலியுறுத்தினார் லலிதா. “உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு ஒருங்கிணைந்த பொறுப்பு,” என்றார் அவர்.

Read Entire Article