அரியலூர், அக்.13- அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை குறைக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்
அரியலூர் மாவட்டம் திருமானூர் மற்றும் ஆண்டிமடத்தில் புதிய தீயணைப்பு நிலையங்கள், ஆதனூர் கிராமத்திலிருந்து அரியலூருக்கு அரசு பேருந்து சேவை, ஆதனூர்- மழவராயநல்லூர் இடையே மருதையாற்றின் குறுக்கே ரூ.14.35 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் அந்த பகுதிகளில் நேற்று (12.10.2025) நடைபெற்றன. நிகழ்ச்சிகளுக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலை மை வகித்தார்.
சட்டமன்ற உறுப்பி னர்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து உயர்மட்ட பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: தீபாவளி பண்டிகைக்காக கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கடந்த ஆயுதபூஜை விடுமுறையின்போது ஒரு சில ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக வந்த புகார்களின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தீபாவளியையொட்டி தற்போது சில ஆம்னி நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. இதுதொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேசி, உரிய கட்டணம் வசூலிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அந்தக் கட்டணத்தைக் குறைக்காவிட்டால், அந்தப் பேருந்துகள் மீது தீபாவளிக்கு முன்பாகவே நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பாலைவனத்தில் அரசியல் பயணம் செய்து கொண்டிருக்கிறார், எங்கேயாவது வசந்தம் கிடைக்காதா என்று பார்க்கிறார். கானல்நீரை பார்த்து உண்மை என நினைத்து பேசிக்கொண்டிருக்கிறார். காலம் அவருக்கு பதில் சொல்லும் என்றார்.