பொதுவாகப் பெண்களைவிட ஆண்களே உறுப்பு தானத்தில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் சில மாநிலங்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியுள்ளது. - சித்திரிப்பு: பிக்சாபே
புதுடெல்லி: இந்தியாவில் 4.9 லட்சத்திற்கும் அதிகமானோர், உயிரிழந்த பிறகு தங்கள் உடல் உறுப்புகளையும் திசுக்களையும் தானம் செய்யப் பதிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதில் பெண்களைவிட ஆண்களே பெரிதும் ஆர்வம் காட்டுவதாக மத்திய அரசாங்கம் அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மே 2ஆம் தேதி வரையிலான தரவுகளின்படி, மொத்தம் 2.62 லட்சத்திற்கும் அதிகமான ஆண்கள் உறுப்பு தானம் செய்யப் பதிவு செய்துகொண்டுள்ளனர். பெண்களைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை 2.26 லட்சமாகப் பதிவாகியிருக்கிறது.
இருப்பினும், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, பஞ்சாப், மிசோரம், சிக்கிம் போன்ற மாநிலங்களில் ஆண்களைவிடப் பெண்களே அதிக எண்ணிக்கையில் உறுப்பு தானம் செய்ய முன்வந்துள்ளனர்.
2023ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில் தொடங்கப்பட்ட ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முறைக்குப் பிறகு பெண்கள் இவ்வாறு உடல் உறுப்பு நன்கொடையில் அதிகம் ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இந்தியாவில் மொத்தம் 4.92 லட்சம் பேர் உயிரிழந்தபின் உறுப்புகளை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர். மாநில அளவில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை எளிதாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உயிரிழந்த ஒருவர் தானம் செய்யும் உறுப்புகள் மூலம் ஏறத்தாழ எட்டுப் பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும். இந்தியாவில் அதிகபட்சமாக 3,39,583 பேர் இதயத்தை நன்கொடையாக வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கல்லீரல் (3,41,038), நுரையீரல் (3,11,898), கணையம் (2,96,863), குடல் (2,94,058), சிறுநீரகம் (1,50,191) ஆகிய உறுப்புகளை தானம் செய்ய மக்கள் முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
.png)






English (US) ·