நடந்து முடிந்த சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், 108 இடங்களுடன் தவெக தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்தது. புதிய ஆட்சியமைக்க அதிமுகவின் தவெக கோரியதாக தொடக்கத்தில் செய்திகள் வெளியாகின. இருப்பினும், அனைவரையும் முந்தி ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது தமிழக அரசியலின் போக்கை மாற்றியமைத்தது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்கக்கூடாது என்ற நிபந்தனையும் விதித்தது. இதனால், அதிமுகவுக்கான வாய்ப்பு குறையத் தொடங்கியது.
இதனையடுத்து, தலா 2 உறுப்பினர்களைக் கொண்ட இடதுசாரி கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தன. 2 உறுப்பினர்களைக் கொண்ட விடுதலை சிறுத்தை கட்சியும் தவெகவுக்கு ஆதரவு கொடுப்பது தள்ளிப்போடுவதாக தகவல்கள் வெளியாகின.
அதிமுக: முன்னதாக, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவி சண்முகம் தவெக கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவும் இதுதொடர்பாக பல்வேறு எம்எல்ஏ-க்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்தனர். இதற்கிடையே, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி அருகே நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அதிமுகவின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதும் பெரும் கவனம் பெற்றுவருகிறது.
இதனிடையே, அதிமுக தலைமையில் புதிய ஆட்சியமையும் எனவும் திமுக இதற்கு வெளியில் இருந்து ஆதரவு அமைக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகின. மேலும், விசிக தலைவர் தொல். திருமாவளவன் பொது முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தி ஆட்சியமைக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகின.
இத்தகைய சூழலில் தான் இன்று அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், "நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பல நாட்கள் கடந்த பிறகு முதன்முதலில் இபிஎஸ் தனது தோல்வியை முதன்முறையாக ஒத்துக்கொண்டு அதிமுக தலைமையிலான புதிய அரசு அமைப்பதில் இருந்து பின்வாங்கினார்.
இதற்கிடையே, விடுதலை சிறுத்தை கட்சியும் தவெக ஆதரவை உறுதிப்படுத்தும் விதமாக தகவலை வெளியிட்டது.
முன்னதாக, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் உட்பட 5 எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்காதது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, கட்சியின் முக்கியத் தலைவர்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் 36-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சென்னை எம்.ஆர்.சி (MRC) நகரில் உள்ள ஒரு தனியார் இடத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுச் செயலாளர் அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையால் அதிமுக கட்சி இன்னொரு பிளவினை நோக்கி செல்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே 5 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில், தற்போதைய அரசியல் மாற்றத்தின் போது அதிமுக எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து அதிருப்தி நிலவுவதையே இது காட்டுவதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக, தவெக-விற்கு ஆதரவு அளிப்பதன் மூலம் அமைச்சரவையில் இடம் பிடிக்கலாம் என ஒரு தரப்பு கருதிய நிலையில், தலைமை எடுத்த முடிவுகள் இவர்களுக்கு உடன்பாடில்லை எனக் கூறப்படுகிறது. கலகக் குரல் எழுப்பும் எம்எல்ஏ-க்கள் தவெக-வுக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.
.png)





English (US) ·