எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் திங்கட்கிழமை (அக்டோபர் 13) நடைபெற்ற காஸா அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உரை நிகழ்த்தினார். - படம்: இபிஏ
கைரோ: காஸா அமைதித் திட்ட உடன்பாடு கையெழுத்தாகியிருக்கிறது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் எகிப்து, கத்தார், துருக்கியே நாடுகளின் தலைவர்களும் அதில் கையொப்பமிட்டனர். எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் நடைபெற்ற உச்சநிலை மாநாட்டில் உடன்பாடு கைகூடியது. காஸாவில் அமைதியைக் கொண்டுவருவதற்கான பிரகடனம் அது.
“புதிய, அழகிய நாள் உதயமாகிறது. மறுநிர்மாணம் தொடங்குகிறது,” என்றார் திரு டிரம்ப். இஸ்ரேலுக்கும் ஹமாஸ் குழுவுக்கும் இடையில் சண்டையை நிறுத்த உதவிய வட்டாரத் தலைவர்களை அவர் பாராட்டினார்.
முன்னதாக இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் திரு டிரம்ப் உரையாற்றினார். நீண்ட, வலிமிகுந்த கொடுங்கனவு இறுதியாய் முடிவுக்கு வந்திருப்பதாக அப்போது அவர் கூறினார்.
அமைதி உடன்பாட்டின் முதற்கட்டத்தில், ஹமாஸ் அதன் வசமிருந்த இஸ்ரேலியப் பிணையாளிகள் 20 பேரை விடுவித்தது. பதிலுக்கு இஸ்ரேல், 250 பாலஸ்தீனக் கைதிகளையும் தடுத்துவைக்கப்பட்டிருந்த 1,700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களையும் விடுதலை செய்தது.
எகிப்திய மாநாட்டில் இஸ்ரேலிய, ஹமாஸ் தரப்புகள் கலந்துகொள்ளவில்லை.
மாநாட்டில் எகிப்திய அதிபர் அப்தெல் ஃபட்டா அல்-சிசியுடனும் உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த 20க்கும் மேற்பட்ட தலைவர்களுடனும் காஸா விவகாரம் குறித்துத் திரு டிரம்ப் பேசினார்.
“அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்,” என்றார் அவர். இதற்கு முன்னரும் பெரிய உடன்பாடுகள் பலவற்றை முடித்திருந்தாலும் இதுவே உந்துகணைக் கலனிலிருந்து புறப்பட்ட அளவுக்கு மிகவும் பெரியது என்று குறிப்பிட்டார்.
“இந்த நிலையை எட்டுவதற்கு 3,000 ஆண்டாகியிருக்கிறது. உங்களால் நம்பமுடிகிறதா? ஆனால் இது நீடித்து நிலைத்திருக்கும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் திரு டிரம்ப்.
கையெழுத்து நிகழ்வுக்குப் பிறகு அமெரிக்க அதிபருக்கு எகிப்தின் ஆக உயரிய விருதை வழங்கி கௌரவித்தார் அதிபர் அல்-சிசி. தங்கச் சங்கிலியாலான அந்த விருது, ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ என்று அழைக்கப்படுகிறது.
“இந்த நாள், வேதனை மிகுந்த அத்தியாயத்தை முடித்துவைத்த வரலாற்று மைல்கல்,” என்றார் எகிப்திய அதிபர்.
பாலஸ்தீன ஆணையத்தின் அதிபர் மஹ்மூட் அபாசும் மாநாட்டில் பங்கெடுத்தார். அண்மையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சண்டைநிறுத்த உடன்பாட்டின் முதற்கட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காஸாவில் பாலஸ்தீன ஆணையத்தின் பங்கு என்னவாக இருக்கும் என்ற கேள்வி தொடர்கிறது.
இந்நிலையில் அமைதி உடன்பாட்டின் இரண்டாம் கட்டப் பேச்சு நடைபெறுவதாகத் திரு டிரம்ப் கூறியுள்ளார்.