செம்பனை உள்ளிட்ட வேளாண் பொருள்கள் ஏற்றுமதி மலேசியாவின் உள்நாட்டு வருவாயின் பெரும்பங்கு வகிக்கின்றது. - படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
புத்ராஜெயா: மலேசிய வேளாண்மைத் துறையில் இளையரின் பங்கேற்பு குறைவதும் அத்துறையின் ஊழியரணி மூப்படைந்து வருவதும் மலேசியாவின் உணவுப் பாதுகாப்பிற்குப் பெருஞ்சவாலாக இருக்கிறது என்று அந்நாட்டு வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வேளாண்துறை சார்ந்த தொழில்நுட்பம், தொழிற்கல்வி, பயிற்சி குறித்த அண்மைய ஆய்வறிக்கையை வெளியிட்டு அமைச்சின் தலைமைச் செயலாளர் இஷாம் இஷாக் வியாழக்கிழமை (ஜூலை 23) உரையாற்றினார்.
“தோட்டத் தொழிலாளர்களில் இருவரில் ஒருவர் 40 வயதிற்கு மேற்பட்டவராக உள்ளார். ஜோகூர், பாகாங், பேராக் போன்ற உயர் வேளாண் திறன் கொண்ட மாநிலங்களில் இத்துறை சார்ந்த தொழில்நுட்பம், தொழிற்கல்வி பயிற்சிகள் இன்னும் முழுமையாக எட்டவில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.
“போதிய வளங்கள் குறித்த பிரச்சினை இனிமேல் இல்லை. ஆனால், ஏற்கெனவே நம்மிடம் உள்ள வளத்தை முழுமையாகப் பயன்படுத்தும் உறுதிப்பாடு நமக்குள்ளதா என்பதே கேள்வி,” என்றார் அவர்.
வேளாண்துறையில் இளையர் பங்கேற்பு குறைந்துவரும் அதேவேளையில், இத்துறையில் பயிற்சி பெற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. 2018ல் 61 விழுக்காடாக இருந்த பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதம், 2025ல் 85.92 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, கோழி வளர்ப்பு, கடல் உயிரின வளர்ப்பு, சந்தைப்படுத்தல், உணவு பதப்படுத்துதல் ஆகிய நான்கு தொழிற்பயிற்சிகளில் 100% வேலைவாய்ப்பு சாத்தியமாகியுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகால நிர்வாகத் தரவுகளைக்கொண்டு ‘பிஎன்பி ஆய்வு நிறுவனம்’ இந்த ஆய்வை நடத்தியுள்ளது. மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி தலைமையிலான தேசிய தொழில்நுட்பம், தொழிற்கல்வி, பயிற்சி மன்றத்திடம் அறிக்கையின் முடிவு கொடுக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களின் தேவைக்கேற்ப பயிற்சிகளை வழங்குவதற்கும் தொழில்முனைவர்க்கான இடர்களைக் குறைப்பதற்கும் 2030 தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கையை வலுப்படுத்துவதற்கும் ஆய்வு முடிவுகள் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.png)








English (US) ·