இளையர்களின் வேகத்துக்கு உரமூட்டி விளையாட்டுப் போட்டி

2 hours ago 16

5aed0992-5856-4c0f-9d02-db2780365db9

போட்டிகளில் உற்சாகமாகப் பங்கேற்ற இளையர்கள். - படம்: சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழர் பேரவையும் சிண்டா இளையர் அமைப்பும் ஒருங்கிணைத்த ‘ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ரா 2026’, பிப்ரவரி 15 தேசிய பல்கலைக்கழகத்தின் பல்நோக்கு அரங்கம் 5ல் நடைபெற்றது.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற அப்போட்டியில், 16 முதல் 26 வயதுவரை உள்ள தமிழ் இளையர்களும் மற்ற இன இளையர்களுமாக கிட்டத்தட்ட 300 இளையர்கள் திரண்டு $2,000 மொத்த ரொக்கப் பரிசுகளுக்காகப் போட்டியிட்டனர்.

ஆண்களுக்கான காற்பந்துப் போட்டி, கலப்பு கேப்டன்ஸ் பால், பெண்களுக்கான இரட்டையர் பூப்பந்து விளையாட்டு என மூன்று முக்கியப் பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.

காற்பந்து, கேப்டன்ஸ் பால் போட்டிகளில் வெற்றி பெற்ற ஐந்திலிருந்து ஏழு வீரர்கள் வரை கொண்ட அணிகளுக்கு தலா $500 முதல் பரிசாக வழங்கப்பட்டது.

பெண்களுக்கான இரட்டையர் பூப்பந்து விளையாட்டின் வெற்றியாளர்கள் $150 ரொக்கத்தை தட்டிச் சென்றனர்.

அனைத்து விளையாட்டுப் பிரிவுகளிலும் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்த அணிகளுக்கும் $50 முதல் $250 வரை ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

“சிண்டா இளையர் குழுவுடன் இணைந்து இந்தப் போட்டிக்காக தயார் செய்வதாலும் பல பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் ஆகியவற்றிலிருந்து மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்வதாலும் இது தொடர்ந்து ஒரு வருடாந்தர நிகழ்வாக உருமாறியுள்ளது,” என்றார் ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ராவின் ஒருங்கிணைப்புத் தலைவரான அர்ஷத் பின் அப்துல் ஜலீல், 25.

கல்லூரிகளின் முன்னாள் மாணவர்களுக்கு அந்நிகழ்வு தங்களுடன் படித்த நண்பர்களை மீண்டும் சந்திக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமைவதால் அவர்கள் ஸ்போர்ட்ஸ் ஸ்பெக்ட்ரா நடைபெறும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்றார் அர்ஷத்.

”வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்களோடு போட்டியிடுவது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது,” என்றார் ‘கேப்டன்ஸ் பால்’ விளையாட்டில் பங்கேற்ற மில்லெனியா கல்விக்கழகத்தில் பயலும் வர்ஷா கணேசன், 18.

கலப்பு கேப்டன்ஸ் பால் விளையாட்டு போட்டி.

கலப்பு கேப்டன்ஸ் பால் விளையாட்டு போட்டி. - படம்: சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்

‘கேப்டன்ஸ் பால்’ என்பது ஒரு குழு விளையாட்டு என்பதால் இதன்மூலம் விளையாட்டாளர்களுக்கு உரிய பெருந்தன்மை, குழுமுயற்சி ஆகிய விழுமியங்களை நாம் கற்றுக்கொண்டோம்,” என்றார் அவர்.

தேசியப் பல்கலைக்கழகத்தில் 4ஆம் ஆண்டு வணிகவியல் பயலும் கெஜ ஷ்ரையா 22, அந்தப் போட்டியில் பங்கேற்பாளராகக் கலந்துகொண்டது இதுவே முதல் முறை. அவர் குழுவில் மொத்தம் எழுவர் இடம்பெற்றனர்.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை முன்னாள் உறுப்பினரான வர்ஷா, தற்போதைய உறுப்பினர்கள் போட்டிகளைச் சிறப்பாக வழிநடத்தியதாகக் கூறினார்.

ஆண்களுக்கான காற்பந்து விளையாட்டு  போட்டி.

ஆண்களுக்கான காற்பந்து விளையாட்டு  போட்டி. - படம்: சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்

“அனைத்துக் குழுக்களுடனும் விளையாடுவது சவால் மிக்கதாக இருந்தது,” என்றார் சிண்டா இளையர்கள் குழுவைச் சேர்ந்த ஆண்கள் காற்பந்து விளையாட்டில் பங்கேற்ற ஆங்கிலோ சீனத் தொடக்கக் கல்லூரியின் சைவராஜ் ஹரிஷ் 19.

போட்டி சவாலாக இருந்தாலும் தமது குழுவினர் வெற்றி பெற முயற்சி செய்ததாகக் குறிப்பிட்டார் கத்தோலிக்கத் தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த மெர்வின் மணிவண்ணன், 19.

பெண்களுக்கான இரட்டையர் பூப்பந்து விளையாட்டுப் போட்டி.

பெண்களுக்கான இரட்டையர் பூப்பந்து விளையாட்டுப் போட்டி. - படம்: சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்

ஜூரோங்-பைனியர் தொடக்கக் கல்லூரியின் முன்னாள் மாணவியான 19 வயது பிரகிதி செல்வராஜூவுக்கு பூப்பந்து விளையாட்டுப் போட்டியில் முதல்முறை ஒரு குழுவாக விளையாடியது புதுமையான அனுபவமாக இருந்தது.

டைமென்ஷன்ஸ் தொடக்கக் கல்லூரியின் ஜவஹர் அஷ்விதா, 19 , போட்டியில் முதல்முறை பங்கேற்றதன் மூலம் நிறைய கற்றுக்கொண்டதாகச் சொன்னார்.

“தொடக்கம் முதலே போட்டியிட்ட அனைவரும் உற்சாகத்துடன் கடுமையாகப் போட்டியிட்டனர்,” என்றார் ‘கேப்டன்ஸ் பால்’ விளையாட்டில் முதல் இடத்தில் வந்த குழுவின் ரினு ராஜ், 20.

Read Entire Article