சிங்கப்பூரர்கள் தங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட ‘சிம்’ அட்டைகளைக் கண்டறிய புதிய வசதி

2 hours ago 15

86fec416-82b9-4e2b-8d3d-33a2cbc51920

மோசடியாகத் தங்கள் பெயரில் சிம்அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை புதிய வசதி மூலம் கண்டறிய முடியும். - கோப்புப் படம்: ஐஎம்டிஏ

சிங்கப்பூரர்கள் தங்களுடைய பெயரில் எத்தனை சிம் அட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை விரைவில் கண்டறிய முடியும்.

அதற்கான புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்படுகிறது. மோசடிகளைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.

தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும், ‘கவ்டெக்’ எனப்படும் சிங்கப்பூர் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பும் இணைந்து உருவாக்கும் ‘சிம்கார்ட்ஹவ்மெனி’ (SIMCardHowMany) என்று அழைக்கப்படும் புதிய முறை இன்னமும் மேம்பாட்டில் உள்ளது.

சட்டவிரோதப் பணமாற்றுக்காக வங்கிக் கணக்குகளைத் திறக்கும் மோசடிகளை முறியடிக்கும் முயற்சியாக புதிய தளம் உருவாக்கப்படுகிறது.

“மோசடிகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க தகவல்தொடர்பு மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகளின் வரிசையில் சுய உதவி சிம் கார்ட் சரிபார்ப்பு இடம்பெறுகிறது,” என்று ஐஎம்டிஏயின் பேச்சாளர் ஒருவர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்விக்கு பதிலளித்தார்.

அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களிலும் பின் கட்டணம் செலுத்தப்படும் பத்து சிம் அட்டைகளை ஒருவர் வைத்திருக்கலாம் என்ற வரம்பையும் இது பூர்த்தி செய்கிறது. இந்தக் கட்டுப்பாடு பிப்ரவரி 28 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தப் புதிய நடவடிக்கை பற்றி ஜனவரி மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

சிம் அட்டைகளை சட்டவிரோதமாக வாங்குவதையும் பயன்படுத்துவதையும் குறைப்பதை இது இலக்காகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் குடும்ப உறுப்பினர்களுக்காக அல்லது வணிக நோக்கங்களுக்காக அதிக எண்ணிக்கையிலான சிம் அட்டைகள் தேவைப்படுவோரின் நியாயமான தேவைகளை இவை பூர்த்தி செய்யும் என்று ஐஎம்டிஏயும், காவல்துறையும் தெரிவித்தன.

ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தில் பத்து சிம் அட்டைகள் வரை வாங்கலாம் என்ற வரம்பு இருந்தது. ஆனால் தற்போது அனைத்துத் தொலைத் தொடர்பு நிறுவனங்களையும் உள்ளடக்கி பத்து சிம் அட்டைகளை மட்டுமே வைத்திருக்க முடியும்.

சிம்கார்ட்ஹவ்மெனி தளத்தில் பயனீட்டாளர்கள் தங்களுடைய சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதில் மின்அஞ்சல் முகவரியையும் தெரியப்படுத்த வேண்டும். அதன் பிறகு பதிவு செய்யப்பட்டுள்ள சிம் அட்டைகளின் எண்ணிக்கை விவரங்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும்.

பொதுமக்களின் கருத்தறிந்து படிப்படியாக புதிய தளம் மேம்படுத்தப்படும் என்று ஆணையம் கூறியது.

“நாங்கள் தொடர்ந்து காவல்துறை, அரசாங்க அமைப்புகளுடன் சேர்ந்து மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைளைத் தீவிரமாக்கி வருகிறோம்,” என அந்தப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

மோசடியாக சிம் அட்டைகள் பதிவு செய்திருப்பது தெரிய வந்தால் உடனடியாக ஸ்கேம்ஷீல்ட் செயலி வழியாக தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்தலாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Read Entire Article