ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்குக் கூடுதல் வரி விதிக்கப்படும்: டிரம்ப் மிரட்டல்

22 hours ago 17

b274493b-cb99-4eeb-b58b-e47d0eda87e4

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: இபிஏ

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரானுடன் வர்த்தகம் புரியும் நாடுகளுக்குக் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

அதன் தொடர்பிலான நிர்வாக ஆணையில் அவர் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) கையெழுத்திட்டார். தீர்வை விகிதம் எவ்வளவு என்பதை ஆணை குறிப்பிடவில்லை. ஆனால் 25 விழுக்காட்டை அது உதாரணமாகச் சுட்டியது.

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அது பொருந்தும் என்று ஆணை தெரிவித்தது. ஈரானிடமிருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ பொருள்களை வாங்கினாலும், இறக்குமதி செய்தாலும், சேவைகளைப் பெற்றாலும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று ஆணை கூறியது.

நிர்வாக ஆணை குறித்துத் திரு டிரம்ப் கருத்து எதனையும் கூறவில்லை. ஃபுளோரிடாவின் பாம் பீச் நகருக்குச் செல்லும் முன்னர் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலிருந்து வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) அவர் பேசினார்.

ஈரானுடனான உறவைப் பொறுத்தவரை, தேசிய நெருக்கடி தொடர்வதையே அண்மை ஆணை மறுஉறுதிப்படுத்துவதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. சூழ்நிலை மாறினால், அதிபர் அதில் திருத்தம் செய்யக்கூடும் என்றும் அது குறிப்பிட்டது.

அமெரிக்கப் பாதுகாப்பு, நலன்கள், நட்பு நாடுகள் முதலியவற்றுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு ஈரானே பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் கருதுவதாக ஆணை தெரிவித்தது. வட்டாரப் பதற்றம், புவியீர்ப்பு ஏவுகணைத் தயாரிப்பு, பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவு, அணுவாயுதங்களை உருவாக்கும் ஆற்றல் முதலியவற்றை அது குறிப்பிட்டுச் சொன்னது.

ஈரான் அது குறித்துக் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

ஓமானில் அமெரிக்க, ஈரானிய அதிகாரிகள் பேச்சு நடத்திவரும் வேளையில், திரு டிரம்ப் நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேச்சு ஆக்ககரமாய் அமைந்ததாக அவர் சொன்னார். ஈரான் உடன்பாட்டை எட்ட விரும்புவதைப் போல் தெரிவதாக அவர் கூறினார்.

“உடன்பாட்டை ஈரான் எட்டவில்லை என்றால், விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும்,” என்றார் அமெரிக்க அதிபர்.

Read Entire Article