உயிரை மாய்த்துக் கொண்ட கே. ராஜன்… விபரீத முடிவுக்கு என்ன காரணம்?

45 minutes ago 14

Last Updated:May 17, 2026 7:59 PM IST

திரைப்படத் தயாரிப்பாளரான கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

News18
News18

தமிழ் சினிமாவில் 1980-களில் இருந்து திரைப்படத் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் தீவிரமாக செயல்பட்டு வந்தவர் கே. ராஜன். விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட இவர், சிறு பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

சினிமா சார்ந்த எந்த ஒரு பொது மேடையிலும், செய்தியாளர் சந்திப்புகளிலும் தனது ஆவேசமான பேச்சுக்களின் மூலம் பரவலாக அறியப்பட்டவர். 85 வயதிலும் சினிமாவில் தீவிர ஈடுபாட்டுடன் இயங்கி வந்த இவர் திடீரென உயிரை மாய்த்துக் கொண்டதாக வெளியான தகவலால் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக ஞாயிறு காலை வண்ணாரப்பேட்டையில் இருந்து தனது காரில் ஓட்டுநருடன் கிளம்பிய அவர், கார் அடையாறு ஆற்றங்கரை அருகே வரும்போது நிறுத்துமாறு கூறியிருக்கிறார். சிறிது நேரம் நடைபயிற்சி செய்வதாக கூறிவிட்டு சென்றவர் திடீரென பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை அடையாறு ஆற்றில் முதியவர் ஒருவர் குதித்து விட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் ஆற்றிலிருந்து சடலமாக மீட்டு விசாரித்த போதுதான் அவர் பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் என்பது உறுதி தெரியவந்து உறுதி செய்யப்பட்டது.

அவரது உடல் உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறுதியாக கே. ராஜன் தனது கார் ஓட்டுநருடன் சென்றதால், அவரிடம் ஏதேனும் பேசினாரா? மனவருத்தத்தில் இருந்தாரா? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு மாதங்களாகவே அவர் எந்தவொரு சினிமா நிகழ்வுகளிலும் பங்கேற்காமல் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில காலமாக தனது குடும்பத்துடன் பெரிதாக தொடர்பில்லாமல் தனியாக வசித்து வந்த கே. ராஜன் திடீரென விபரீத முடிவை எடுத்தது ஏன் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

85 வயதிலும் தீவிரமாக சினிமா துறையில் இயங்கி வந்த தயாரிப்பாளர் கே. ராஜன், இசை வெளியீட்டு விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தமிழ் சினிமா சந்திக்கும் சவால்கள் குறித்து அதிரடியாக பேசுவதன் மூலம் பலராலும் அறியப்பட்டவர். தயாரிப்பாளர்களின் நஷ்டங்கள், நடிகர்களின் அதிகப்படியான சம்பளம் மற்றும் திரையுலகில் நிலவும் முறைகேடுகள் குறித்து எந்தவித ஒளிவுமறைவும், சமரசமும் இன்றி உடைத்து பேசி செய்திகளில் இடம்பிடித்து வந்தவர் கே. ராஜன்.

1983ஆம் ஆண்டு நடிகர் சுரேஷ் நடித்த 'பிரம்மச்சாரிகள்' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். 1991ஆம் ஆண்டு நிழல்கள் ரவி, சரத்குமார் நடித்த நம்ம ஊரு மாரியம்மா திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.

கணேஷ் சினி ஆர்ட்ஸ் மூலம் பல திரைப்படங்களை தயாரித்த இவர், அப்பாஸ் - குணால் நடித்த 'உணர்ச்சிகள்' உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். கடந்த 2000ஆம் ஆண்டில் சென்னை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து, சினிமா வர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றினார்.

இவரது மகன் பிரபுகாந்தும் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2019ஆம் ஆண்டு வெளியான எல்கேஜி படத்தை இவர் தான் இயக்கியுள்ளார். 85 வயதான மூத்த ஆளுமை ஒருவர் இத்தகைய துயரமான முடிவை தேடிக்கொண்டது சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும், சோக அலையையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்குத் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article