தாய்லாந்தின் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் தடைசெய்யப்பட்டுள்ளது. - படம்: தாய்லாந்துபுளோக்
பேங்காக்: தாய்லாந்தில் மதுபானத்தைக் கட்டுப்படுத்தும் எட்டு அறிக்கைகள் நடப்புக்கு வந்துள்ளன. குறிப்பிட்ட பொதுப் போக்குவரத்து, மாநில, அரசாங்கத் தொடர்புடைய வட்டாரங்கள் உள்ளிட்டவற்றில் மே 12ஆம் தேதியிலிருந்து மதுபானங்களை அருந்தவோ விற்கவோ முடியாது.
மதுபானக் கட்டுப்பாட்டுத் விதிமுறைகளின்கீழ் தாய்லாந்தின் அரசிதழ் எட்டு அறிக்கைகளை வெளியிட்டது. 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மதுபானக் கட்டுப்பாட்டு விதிமுறைகள், தற்போதைய நடைமுறைக்குப் பொருத்தமாக மாற்றப்பட்டுள்ளன.
மாற்றப்பட்ட விதிமுறைகளின்கீழ் சாலைகள், வாகனங்கள், சாலையில் உள்ள வாகனங்களுக்கு உட்புறம் ஆகியவற்றில் மதுபான விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது.
பேங்காக் ரயில்வே நிலையத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட மண்டபத்தைத் தவிர பிற ரயில் நிலையங்களிலும் ரயில்களும் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது.
பொதுப் பயணிகளுக்கான படகுத்துறை, பயணிகள் படகுகள், தாய்லாந்து முழுதும் உள்ள பயணிப் பேருந்து முனையங்கள் ஆகியவற்றில் மதுபானம் விற்க மட்டுமல்ல, அருந்தவும் தடை உள்ளது.
தொழிற்சாலைகளுக்கும் அந்தத் தடை பொருந்தும். எனினும், மதுபானங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மதுபானங்களைச் சுவை பார்த்து வழக்கம்போல விற்பனை செய்யலாம்.
அரசாங்க அமைப்புகளால் கண்காணிக்கப்படும் அல்லது பயன்படுத்தப்படும் இடங்களில் மதுபானம் அருந்த முடியாது. மாநில நிறுவனங்கள், பிற மாநில அமைப்புகளுக்கும் அது பொருந்தும்.
மாநில நிறுவனங்களாலும் பிற மாநில அமைப்புகளாலும் செயல்படுத்தப்படும் பொதுப் பூங்காக்களிலும் மதுபானம் அருந்த முடியாது.
மேலும், ஏற்கெனவே மதுபோதையில் இருப்போருக்கு மதுபானம் விற்பனை செய்வதையும் தடைசெய்யும் புதிய நடைமுறை தாய்லாந்து அரசிதழில் வெளியிடப்பட்டது.
மதுபோதையில் இருக்கும் ஒருவர் அடுத்தவர்களுக்குக் காயம் விளைவித்தாலோ மரணத்தை ஏற்படுத்தினாலோ அவருக்குக் கூடுதலாக மதுபானம் விற்ற விற்பனையாளர்மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
.png)








English (US) ·