பிப்ரவரி 12ஆம் தேதியன்று பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யவிருக்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
பிப்ரவரி 12ஆம் தேதி வியாழக்கிழமையன்று பிரதமர் லாரன்ஸ் வோங், நிதியமைச்சர் என்ற முறையில் நாட்டின் வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் வரவுசெலவுத் திட்டம் என்பது வெறும் நிதி ஒதுக்கீடு மட்டுமன்று. அது நம் நாட்டின் எதிர்காலப் பயணத்திற்கான ஒரு திசைகாட்டி.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை நாம் வெறும் பார்வையாளர்களாக மட்டும் கவனிக்காமல், அதில் தீவிரமாகப் பங்கெடுக்கும் சமூகமாக விளங்கவேண்டும்.
இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில், வேகமாக மூப்படைந்துவரும் மக்கள்தொகைக்கான ஆதரவுக் கட்டமைப்புகள், அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம், மறுதிறன் மேம்பாடு, வருமான இடைவெளியைக் குறைத்தல் போன்ற முக்கியமான அம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.
அரசாங்கம் மக்களுக்காகப் பல்வேறு வளங்களைச் செலவிட்டுத் திட்டங்களைத் தீட்டினாலும், அவை அனைத்தும் தானாக வந்துசேரும் என்ற எண்ணம் இருக்கக்கூடாது. திட்டங்களின் பயன்கள் உரியவர்களைச் சென்றுசேர தனிமனிதர்களின் பங்களிப்பும் முயற்சியும் இன்றியமையாதவை.
கடந்த காலங்களில் பல முக்கியத் திட்டங்களைச் சரிவர பயன்படுத்திக்கொள்ளாதோரில் இந்தியச் சமூகத்தினர் அதிக அளவில் இருப்பது கவலைக்குரியது.
எடுத்துக்காட்டாக, நீண்டகால அதிகாரப் பத்திரம் (LPA), முன்கூட்டிய பராமரிப்புத் திட்டமிடல் (ACP), உயில் எழுதுதல், மத்திய சேமநிதி வாரிசுதாரர் நியமனம் போன்ற வசதிகள் இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ வழங்கப்பட்டாலும், அவற்றைச் செய்துகொள்ளாத இந்தியர்கள் அதிகமாகவே உள்ளனர்.
அதேபோல், எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குத் தயார்ப்படுத்தும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர், நல்வாழ்வை உறுதிப்படுத்தும் மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி (Healthier SG) போன்ற திட்டங்களிலும் நமது சமூகத்தின் பங்களிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம்.
சலுகைகள் என்பவை வெறும் ரொக்கமாகவோ பற்றுச்சீட்டுகளாகவோ மட்டுமே வருவதில்லை; அப்படி எதிர்பார்ப்பதும் நன்மை பயக்காது. தொலைநோக்குச் சிந்தனையுடன் நீண்டகாலப் போக்கில் பலன் தரும் தேசிய திட்டங்கள், சிறந்த வாழ்க்கை முறையை அமைப்பதற்கான வாய்ப்புகளாகவும் வருகின்றன.
எனவே, பிரதமரின் வரவுசெலவுத் திட்ட அறிக்கையையும் அதனைத் தொடர்ந்து பல்வேறு அமைச்சுகள் வெளியிடும் அறிவிப்புகளையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
சீரிய முறையில் ஆழமாகச் சிந்தித்து, முதலாளிகள், ஊழியர்கள், நிறுவனங்கள், சமூக அமைப்புகள், குடும்பங்கள், தனிமனிதர்கள் என்று பல தரப்பினரிடமிருந்து பல்வேறு வழிகளில் கருத்தறிந்து, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்குமான இன்றியமையாத தேவைகள் மட்டுமின்றி வருங்காலத் தலைமுறையினருக்கும் வேண்டிய கட்டமைப்புகளிலும் கவனம் செலுத்தி வரையப்படும் சிங்கப்பூரின் வரவுசெலவுத் திட்டம், உலகெங்கிலும் எளிதாகக் காணப்படாத ஒரு செயல்முறை.
குடிமக்கள் அத்தகைய வரப்பிரசாதத்தை அதன் மதிப்பு அறியாமல் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
மேலும், இன்றைய சூழலில் பொருளியல் மாற்றங்கள் வெறும் அரசின் முடிவுகளால் மட்டுமே சமாளிக்கப்படுவதில்லை. தனிமனிதப் பொறுப்புணர்வு, தொடர்ச்சியான கற்றல் மனப்பாங்கு, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் திறன் ஆகியவையும் சம அளவில் முக்கியத்துவம் பெறுகின்றன.
குறிப்பாக, தொழில்நுட்ப வளர்ச்சியால் பல வேலைகள் மாறிவரும் நிலையில், ‘என்ன கிடைக்கிறது?’ என்பதைக் காட்டிலும் ‘என்ன கற்றுக்கொள்ளலாம்?’ என்ற கேள்வி நம்மை முன்னேற்றும். வரவுசெலவுத் திட்டம் அந்தக் கற்றலுக்கான வாயில்களைத் திறந்து வைக்கிறது.
அதேவேளையில், சமூக அமைப்புகள் மற்றும் தொண்டூழியர்களின் பங்கும் இங்கு குறிப்பிடத்தக்கது. அரசு வகுக்கும் கொள்கைகள் பலனளிக்க, அவற்றை மக்களிடம் கொண்டுசேர்ப்பது சமூகத் தலைவர்களும் அமைப்புகளும்தான்.
அதற்கு, சமூக அளவிலான முயற்சிகள் அவசியம். ‘அரசு - சமூகம் - தனிமனிதன்’ என்ற முக்கோண ஒத்துழைப்பே ஒரு வரவுசெலவுத் திட்டத்தின் முழுமையான வெற்றிக்கான அடித்தளம்.
அரசு அமைப்புகள் ஒருவரது வாசலைத் தேடி வரும்வரை காத்திருக்காமல், அவருக்குத் தகுதியான திட்டங்களை அவரே கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். குடும்பத்தின் ஒவ்வோர் உறுப்பினருக்கும் பயன்தரும் ஏதோ ஒரு திட்டம் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் உறுதியாக இருக்கும். அவற்றைத் தம்வசப்படுத்தி, அரவணைத்து, ஒன்றிணைந்து முன்னேறுவோம்.
.png)






English (US) ·