கட்சித் தாவல் தடைச் சட்டம்… எம்.எல்.ஏ. பதவி பறிப்பு… சி.வி. சண்முகம் தரப்பிற்கு சிக்கல்கள்? சட்டம் சொல்வது என்ன?

1 hour ago 12

மேலும், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் தனி அணியாகவும், ஈபிஎஸ் உடன் சில எம்.எல்.ஏ.-க்களும் அடுத்தடுத்து ஆலோசனைகள் நடத்தின. இதன் நீட்சியாக, அதிமுக சட்டப்பேரவை தலைவராக எஸ்.பி. வேலுமணியை நியமிக்க ஒரு தரப்பினரும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினரும் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ. சி.வி. சண்முகம், தேர்தலுக்கு முன்பிருந்த எந்த கூட்டணியிலும் தற்போது அதிமுக இல்லை என்று பாஜகவுடனான கூட்டணி முறிவை அறிவித்தார். தொடர்ந்து பேசிய சி.வி. சண்முகம், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி, விஜய் தலைமையிலான தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.

இந்நிலையில், "தவெகவுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தச் சூழலில் சட்டமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. 107 இடங்களில் வென்றுள்ள தவெகவுக்கு ஏற்கனவே திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மை இருக்கிறது. இந்தநிலையில், அதிமுகவின் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்களும் தவெகவுக்கு ஆதரவு தருகிறார்களா என்பது வெளிச்சத்திற்கு வந்துவிடும். இதன் பிறகு இருக்கும் சிக்கல்கள் என்பதை பார்ப்போம்.

கட்சித் தாவல் தடைச் சட்டம்:

ஒரு கட்சியின் சார்பாக மக்கள் தேர்ந்தெடுத்த பிறகு, ஒருவரோ அல்லது அதற்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகளோ மாற்றுக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால், கட்சித் தாவல் தடைச் சட்டம் பாய்ந்து அவர்களின் பதவி பறிபோகும்.

எப்போது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது?

மூன்றில் இரண்டு பங்கினர் மொத்தமாக தங்களது கட்சியில் இருந்து மாற்று கட்சிக்கு செல்லும்போது கட்சித் தாவல் தடை சட்டம் பாயாது. சமீபத்திய உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், ஆம் ஆத்மிக்கு மாநிலங்களவையில் 10 எம்.பி.க்கள் இருந்தனர். இதில் 7 பேர் பாஜகவுக்கு மாறினர். இது மூன்றில் இரண்டு பங்கு விதியின் கீழ் வருகிறது. இதன் காரணமாக அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயவில்லை.

அதிமுகவில் என்ன நிலைமை?

அதிமுகவில் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் என இரண்டு குழுக்களாக இருந்துவருகின்றனர். இதில், சி.வி. சண்முகம் தரப்பு நாளை தவெகவுக்கு ஆதரவு எனவும், இபிஎஸ் தரப்பு எதிர்ப்பு எனவும் நிலைபாடுகளை எடுத்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து தவெக ஆதரவு நிலை எடுத்தால் என்ன நடக்கும்?

அதிமுக தவெக என்றில்லாமல் பொதுவாக, ஒரு கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு, பின்னர் அக்கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி, வேறு ஒரு கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அசல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையின்படி கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயும். இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர்களின் எம்.எல்.ஏ பதவி பறிபோகும்.

தகுதி நீக்கம்: ஒருவர் தான் போட்டியிட்ட கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகவோ, வேறு கட்சிக்கு ஆதரவாகவோ செயல்படுவது, தாமாகவே உறுப்பினர் பொறுப்பைத் துறப்பதாக (Voluntarily giving up membership) கருதப்படுகிறது. இதனால் சபாநாயகர் (Speaker) மூலம் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

அதேசமயம், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 3-ல் 2 பங்கு பேர் ஒரே நேரத்தில் மற்றொரு கட்சியுடன் இணைந்தால் மட்டுமே அது 'கட்சி தாவல்' ஆகக் கருதப்படாது. தனிப்பட்ட நபராகவோ அல்லது சில உறுப்பினர்கள் மட்டுமே பிரிந்து சென்றாலோ பதவி பறிபோகும். நாளை அதிமுகவில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Read Entire Article