கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது ஏன்? உச்ச நீதிமன்றம்

16 hours ago 13

Last Updated:October 13, 2025 12:20 PM IST

கரூர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது, அஜய் ரஸ்தோகி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றம்
கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றம்

கரூரில் விஜயின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி நடந்த தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கூட்ட நெரிசல் குறித்து ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தவெக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்று முறையிடப்பட்டிருந்தது.

அதேநேரம், கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி பாஜக மற்றும் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தன. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அதிரடி உத்தரவிட்டனர். சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தும் உத்தரவிட்டனர்.

அரசியல் கட்சியினர் ’ரோடு ஷோ’ நடத்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முறையாக விசாரிக்கவில்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். தமிழக வெற்றிக் கழகத்தை வழக்கில் இணைக்காத நிலையில், தனி நீதிபதி தனது உத்தரவில் சில கருத்துகளை தெரிவித்திருப்பதாகக் கூறிய நீதிபதிகள், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கும் முடிவுக்கு தனி நீதிபதி எப்படி வந்தார் என்றும் வினவினர்.

கரூர் மாவட்டம் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அதிகாரப்பூர்வ எல்லைக்குள் வந்தாலும், அந்த வழக்கை உயர்நீதிமன்றத்தின் பிரதான அமர்வில் உள்ள தனி நீதிபதி ஏன் எடுத்துக்கொண்டார் என்றும் கிரிமினல் வழக்காக விசாரித்தது ஏன் என்றும் சரமாரியாகக் கேள்வியெழுப்பினர். இதுகுறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் மனுதாரர்களுக்கு தெரியாமலேயே சிபிஐ விசாரணை கோரி மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய மோசடி என்று தமிழ்நாடு அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதிகள், போலி மனுத்தாக்கல் செய்த விவகாரத்தை விரிவாக ஆய்வு செய்த பின்னர் தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று தெரிவித்தனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.

First Published :

October 13, 2025 12:20 PM IST

Read Entire Article