நடந்து முடிந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஸ்பெயின் வாகை சூடி, கிண்ணம் ஏந்திக் கொண்டாடியது.
அந்தக் குதூகலம் அடங்குவதற்குள் தமிழ் முரசிலும் கொண்டாட்டம் களைகட்டியது.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தொடர்பாக ‘காற்பந்து கலாட்டா’ எனும் வலையொளியைத் தமிழ் முரசு நடத்தியது.
இந்த வலையொளியைத் தமிழ் முரசின் நிர்வாக உதவி ஆசிரியர் நரேந்திரன் பிள்ளை தொகுத்து வழங்கினார். அவருடன் இணைந்து நிர்வாக உதவி ஆசிரியர் பிரசன்னா கிருஷ்ணன் (முதல் பாகத்தில் மட்டும்), உதவி ஆசிரியர் கருணாநிதி ஜீவானந்தம், செய்தியாளர் யுகேஷ் கண்ணன் (இரண்டாம் பாகத்திலிருந்து) ஆகியோர் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி ஆட்டங்களை அலசி ஆராய்ந்து, விரிவாகப் பேசினர். காணொளிப் பதிவுகள் மூலமாகவும் ஆட்டங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
‘காற்பந்து கலாட்டா’வின் இந்த முதல் தொடர், மொத்தம் ஆறு பாகங்களைக் கொண்டுள்ளது.
பாகங்கள் 5, 6 ஆகியவற்றில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தேசியக் காற்பந்துக் குழுவின் விளையாட்டாளர் டி. ராமு கலந்துகொண்டார்.
வலையொளியின் சிறப்பு அம்சமாக ரசிகர்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. அதில் ஏறத்தாழ 200 பேர் பங்கெடுத்தனர்.
அரையிறுதிக்குத் தகுதி பெறும் நான்கு குழுக்களைச் சரியாக ஊகித்த மூன்று பேருக்குத் தலா $50 பெறுமானமுள்ள ‘டிகாத்லான்’ பற்று அட்டை வழங்கப்பட்டது.
இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்ற இரண்டு குழுக்களைச் சரியாக ஊகித்த மூவருக்குத் தலா $75 பெறுமானமுள்ள ‘டிகாத்லான்’ பற்று அட்டை வழங்கப்பட்டது.
இறுதி ஆட்டத்தில் வெற்றிக் கனியைச் சுவைத்து கிண்ணத்தைத் தட்டிச் சென்ற குழுவைச் சரியாக ஊகித்த ஒருவருக்கு $250 பெறுமானமுள்ள ‘டிகாத்லான்’ பற்று அட்டை, மாதிரி உலகக் கிண்ணம், உலகக் கிண்ணப் போட்டிக்காக வடிவமைக்கப்பட்ட காற்பந்தின் மாதிரி ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டன.
வலையொளியின்போது மின்னிலக்க முறைப்படி வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு வியாழக்கிழமையன்று (ஜூலை 23) பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழா தமிழ் முரசு அலுவலகத்தில் நடைபெற்றது. பரிசுகளைத் தமிழ் முரசின் ஆசிரியர் திரு ராஜசேகர் தங்கவேலு வழங்கினார்.
$50 பெறுமானமுள்ள ‘டிகாத்லான்’ பற்று அட்டையைக் குருசாமி துரை, ஸ்ரீகாந்த மாரியப்பா, தேனம்மை ஆகியோர் வென்றனர்.
$75 பெறுமானமுள்ள ‘டிகாத்லான்’ பற்று அட்டையை சுந்தரவடிவேல் பிரபவ், அனிஸ் ஃபாத்திமா, ராஜமோகன் சந்தனத்தேவன் ஆகியோர் வென்றனர்.
கிண்ணத்தை ஏந்தும் குழுவைச் சரியாக ஊகித்து மாபெரும் பரிசைத் தட்டிச் சென்றார் தாமரை முத்தையன்.
“இந்தக் ‘காற்பந்து கலாட்டா’ வலையொளி முதன்முறையாக நடத்தப்பட்டுள்ளது. வலையொளி மிகவும் சிறப்பாக அரங்கேறியது என்றுதான் சொல்லவேண்டும். ஒவ்வொரு பாகத்திலும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி குறித்து மிகத் தெளிவாக அலசி ஆராயப்பட்டது. அவற்றைக் கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. வலையொளியை நடத்திய மூவரும் பேசிய விதம் அருமையாக இருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொருவரின் கருத்து, அவர்கள் ஆட்டங்களைக் காணும் கோணம் தனித்துவம் வாய்ந்ததாக அமைந்தது. முன்னாள் தேசியக் காற்பந்துக் குழு விளையாட்டாளர் டி. ராமு இந்த வலையொளியில் கலந்துகொண்டது ‘காற்பந்து கலாட்டா’வுக்கு மேலும் மெருகூட்டியது,” என்று தாமரை முத்தையன் குறிப்பிட்டார்.
“காற்பந்து வலையொளிகள் பொதுவாக ஆங்கிலத்தில்தான் நடத்தப்படும். ஆனால், ‘காற்பந்து கலாட்டா’ அந்தக் குறையைப் போக்கிவிட்டது. பல சுவாரசியமான தகவல்களுடன் கலகலப்பான முறையில் நடத்தப்பட்ட ‘காற்பந்து கலாட்டா’ வலையொளி மிகவும் பாராட்டுக்குரியது. இந்த இன்ப அதிர்ச்சிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியுடன் நிறுத்திவிடாமல் மேலும் பல காற்பந்துப் போட்டிகள் பற்றிய அலசலையும் ‘காற்பந்து கலாட்டா’வில் கண்டு களிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று கலை இயக்குநரான 50 வயது ராஜமோகன் சந்தனத்தேவன் கூறினார்.
.png)



English (US) ·