Last Updated:October 13, 2025 10:07 PM IST
கோல்ட்ரிஃப் மருந்தால் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் ஸ்ரீசன் பார்மா, ரங்கநாதன், ED அதிகாரிகள் சோதனை, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
கோல்டிரிஃப் இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் சென்னையில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமையாளர் ரங்கநாதனின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் அடுத்தடுத்து 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, நடத்தப்பட்ட சோதனையில், குழந்தைகள் குடித்த 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தில் நச்சுத் தன்மை இருந்தது அம்பலமானது.
இருமல் மருந்தில் 'டை எத்திலின் கிளைகால்' என்ற ரசாயனம் குறிப்பிடப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த, 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு, தற்போது அதன் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை, மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர். மேலும் 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து, தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் முறையாக கண்காணிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் 'ஸ்ரீசன் பார்மா' நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்புடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதேபோன்று, ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தை முறையாகக் கண்காணிக்கவில்லை என்ற புகாரில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட மருத்துவத் துறை அதிகாரிகள் வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதன்படி, திருவான்மியூரில் உள்ள மருந்து ஆய்வாளர் தீபா ஜோசப் வீட்டிலும், அண்ணா நகரில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை இணை இயக்குநர் கார்த்திகேயனுக்கு சொந்தமான வீட்டிலும் ED சோதனை நடைபெற்றது. ஏற்கனவே, இந்த இரு அரசு அதிகாரிகளும் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அந்த வழக்கின் அடிப்படையிலும் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாலையிலேயே சோதனை நடத்த சென்றனர். அப்போது, அலுவலகம் பூட்டப்பட்டு இருந்ததால், அதிகாரிகள் வெளியே காத்திருந்தனர். பின்னர், ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பார்மா நிறுவனம் திறக்கப்பட்டதும் சோதனையில் இறங்கினர். கோல்ட்ஃரிப் மருத்து தயாரித்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பியதில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.
இந்த சோதனையில் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கோல்ட்ரிஃப் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்திலும், சட்டவிரோத பணப்பரிமாற்ற விவாகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காலையில் இருந்து ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை இரவில் நிறைவடைந்தது. இதையடுத்து முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் அங்கிருந்து கைப்பற்றி எடுத்து சென்றனர்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.
First Published :
October 13, 2025 10:07 PM IST