மங்களூர: ஜூலை 23-
குடும்பத் தகராறு மற்றும் கொடுமை காரணமாக இளம் பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம், கொலை என உறுதியானதை அடுத்து, அவரது மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகிய 3 பேரை சுள்ளியா காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புத்தூர் தாலுகா கெதம்பாடி பகுதியைச் சேர்ந்த சுபைதா என்பவரின் மகள் பாத்திமத் நிஷானா. இவருக்கும் சி.பி. அலவி குடும்பத்தினருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த ஜூலை 18-ந் தேதி இரவு, பாத்திமத் நிஷானா தனது தாய் சுபைதாவுக்கு போன் செய்து பேசியுள்ளார். அப்போது, கணவர் வீட்டில் மாமனார் அலவி, மாமியார் ஆயிஷா மற்றும் நாத்தனார் பசீலா ஆகிய மூவரும் தன்னை மனரீதியாகவும், உடலிரீதியாகவும் கடுமையாக சித்ரவதை செய்வதாக கூறி கதறி அழுதுள்ளார்.
தாய்-மகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட மாமனார் அலவி, நிஷானாவின் கையில் இருந்த போனை பறித்து, “உன் மகளை கொன்றுவிடுவேன்” என தாய் சுபைதாவுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் சுபைதா, உடனடியாக மகளைப் பார்க்க அவரது வீட்டிற்கு பதறியடித்துக் கொண்டு ஓடினார். ஆனால், அதற்குள் நிஷானா உயிரிழ்ந்துவிட்டதாக செய்தி வந்து சேர்ந்தது.
குடும்பத் தகராறு காரணமாக மாமனார் அலவி, மாமியார் ஆயிஷா, நாத்தனார் பசீலா ஆகிய மூவரும் சேர்ந்தே தனது மகளை அடித்துக் கொலை செய்துள்ளதாக தாய் சுபைதா சுள்ளியா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சுள்ளியா போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து ஜூலை 22-ந் தேதி, குற்றவாளிகளான சி.பி. அலவி (54), ஆயிஷா மற்றும் பசீலா (29) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.