தவறிழைத்ததாகக் கூறப்படும் மாணவர் நால்வரும் நவம்பர் மாதம் தொடங்கும் பள்ளி ஆண்டிறுதித் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறியிருந்தது மக்களிடம் கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. - படம்: ஃபத்லினா சிடெக்/ஃபேஸ்புக்
கோலாலம்பூர்: மலாக்காவிலுள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் பதின்ம வயதுச் சிறுமியைக் கூட்டாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் கூறப்படும் மாணவர்கள் நால்வர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இம்மாதம் 2ஆம் தேதி பள்ளி நேரம் முடிந்த பிறகு வகுப்பறைக்குள் அக்கொடுமை அரங்கேறியதாகச் சொல்லப்படுகிறது.
நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அச்சம்பவம், பள்ளிகளில் அறநெறிக் கல்வி, மாணவர் ஒழுக்கம், பாதுகாப்பு குறித்து தீவிர விவாதத்தை எழுப்பியுள்ளது.
அச்சம்பவத்தை அரசாங்கம் கையாளும் விதமும் பொதுமக்களிடம் கடுங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவறிழைத்ததாகக் கூறப்படும் மாணவர் நால்வரும் நவம்பர் மாதம் தொடங்கும் பள்ளி ஆண்டிறுதித் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர் என்று கல்வி அமைச்சர் தெரிவித்திருந்ததே அதற்குக் காரணம்.
இந்நிலையில், “பள்ளி ஒழுங்குமுறைக் குழு இன்று (அக்டோபர் 13) கூடி, அந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மாணவர்களைப் பள்ளியிலிருந்து நீக்கியது,” என்று கல்வித்துறை தலைமை இயக்குநர் அஸாம் அகமது தெரிவித்தார்.
இதனிடையே, ஒவ்வொரு பாலியல் வன்கொடுமை அல்லது குற்றச் செயலும், குற்றமிழைத்தவர் எந்த வயதினர் என்றாலும், தண்டனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படும் என்றும் என்று அமைச்சர் அஸாலினா ஒத்மான் கூறியிருக்கிறார்.
“18 வயதிற்குட்பட்டவர் என்றாலும் குற்றமிழைக்கும் ஒருவர் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியாது. பலரும் இதனைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். தவறு தவறுதான், தீங்கு தீங்குதான்,” என்றார் அமைச்சர்.
சந்தேகப் பேர்வழிகளில் இருவர் அச்சிறுமியைச் சீரழித்ததாகவும் அதனைக் கைப்பேசியில் படம்பிடித்ததாகவும் சொல்லப்படுகிறது. மற்ற இருவரும் வேறு யாரும் வருகிறார்களா எனப் பார்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் நால்வரையும் ஆறு நாள் காவலில் வைக்கும்படி அக்டோபர் 11ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.