
பத்மசிறீ மருத்துவர்
வி.எஸ்.நடராஜன்
முதியோர் நல மருத்துவம்,
சென்னை
கோடைக்காலம் தொடங்கிவிட்டது, வெயில் கொடுமை ஆரம்பித்துவிட்டது. இந்தச் சமயத்தில் உடலுக்கு என்னென்ன தொல்லைகள் ஏற்படும், இதை எப்படிச் சமாளிப்பது?
தோல் தான் நமது உடலின் பெரிய உறுப்பாகும். உடலுக்குக் கவசம் போல் வெளிக்காயம் வராமல், தோல்தான் நமது உடலைப் பாதுகாக்கிறது. வைட்டமின் டி உற்பத்தி செய்து உடல் எலும்பை உறுதியாக வைத்துக் கொள்கிறது. உடலுக்கு நன்மையைக் கொடுக்கிறது. வேர்வை மூலம் உடல் வெப்ப நிலையைச் சரிசமமாக வைத்துக் கொள்கிறது.
கோடைக்காலத் தொல்லைகள்

அதிக வியர்வையினால், உடலிலுள்ள உப்பு மற்றும் நீர் அதிகமாக வெளியேறுவதனால் உடல் மிகவும் பலவீனம் அடையும்.
லேசாகக் களைப்பு, மயக்கம், தலைவலி, குமட்டல் போன்ற தொல்லைகள் தோன்றும்.
நாக்கு வறட்சி அடையும்.
சிறுநீர் செல்வது குறையும். சிலருக்கு நீர்க்கடுப்பும் உண்டாகும்.
உடலில் போதிய தண்ணீர் இல்லாததனால் மலச்சிக்கல் ஏற்படும்.
இரவில் தூக்கம் சரியாக இருக்காது.
தோல் சார்ந்த தொல்லைகள்
சூரிய ஒளியில் உள்ள யு.வி (Ultra violet ray) கதிர்கள் தோல் மேல் தொடர்ந்து படும்பொழுது தோலின் நிறம் சிவக்கும், தோல் அரிக்கும் அல்லது தடித்துப்போகும்.
அதிகமாக வியர்த்துக் கொட்டும். அதனால் உடலில் அரிப்பு தோன்றும்.
சில சமயங்களில் வியர்வையில் நாற்றம் இருக்கும்.
முதுகு மற்றும் பல உடல் பாகங்களில் வியர்க்குரு தோன்றும்.
உடலின் பல பகுதிகளில் வேனல் கட்டிகள் எனப்படும் சிறு சிறு கொப்புளங்கள் தோன்றும். முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இவை அதிகம் வர வாய்ப்புண்டு.
முகத்தில் உள்ள முகப்பரு அதிகரிக்க வாய்ப்புண்டு.
தோல் வனப்பு குறைந்து சுருக்கம் ஏற்படும்.
உடலில் பூஞ்சைக்காளான் நோய்த்தொற்று ஏற்படலாம். அது அக்குள் மற்றும் இடுப்புப் பகுதியில் அதிகமாகத் தோன்றும்.
கெண்டைச் சதைப் பிடிப்பு (Cramps)
வெயில் காலத்தில், அதிகமாக உடற்பயிற்சி செய்த பின்பு காலில் உள்ள ஆடுசதையில் அதிகமாக வலி உண்டாகும். உப்பு கலந்த தண்ணீரைக் குடித்தால் வலி உடனே சரியாகிவிடும். இத்தகைய தொல்லை வருபவர்களுக்குச் சிறிது உப்பை உணவில் சேர்த்துக்கொண்டால் சதையில் வலி ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க…

முடிந்தவரை, அதிகமாக வெயில் இருக்கும் சமயத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்கலாம்.
வெளியே போவதற்கு முன்பு தண்ணீர், சிறிது உப்பு கலந்த மோர் அல்லது பழரசம் அருந்துவது நல்லது.
வெளியே போகும்பொழுது அவசியம் குடை அல்லது தொப்பி எடுத்துச் செல்ல வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 2 – 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதயநோய் அல்லது சிறுநீரக நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான நீரை அருந்தலாம். தண்ணீர் தாகம் எடுக்கும்பொழுது உடலிலுள்ள செல்கள் எல்லாம் வறட்சி நிலையை அடைந்துவிடுகின்றன. அதனால்தான் உடல் சோர்வும், மயக்கமும் வருகிறது.தாகம் வருவதற்கு முன்பே அடிக்கடி தண்ணீர் அருந்திக்கொண்டால் நீர் வறட்சி ஏற்படாமல், உடல் களைப்பும் ஏற்படாமல் இருக்க முடியும்.
முதியோர்களுக்கு வெயில் அதிகம் இருந்தாலும் அவ்வளவாகத் தாகம் எடுக்காது. ஆகையால் போதிய தண்ணீர் குடிக்கமாட்டார்கள். வீட்டில் உள்ளவர்கள் முதியோர்களைப் போதிய தண்ணீரைக் குடிக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
தர்ப்பூசணி, இளநீர், ஆரஞ்சு போன்ற பழரசங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.
மசாலா அதிகம் உள்ள உணவைத் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம். உதாரணம்: அசைவ உணவு
கஞ்சி – கம்பு, தினை ஆகியவற்றில் செய்த கஞ்சி, உடல் சூட்டைக் குறைக்கவல்லது. எளிதில் செரிக்கவல்லது.
முடிந்தவரை காற்றோற்றமுள்ள அறையில் இருந்தால் நல்லது.
மின் விசிறி, ஏர்க்கூலர், குளிர்சாதனப் பெட்டி ஆகிய உபகரணங்களைத் தேவைக்கேற்ப உபயோகிக்கலாம்.
படுக்கை அறையில் வெட்டிவேர்க் கொடியைத் தண்ணீரில் நனைத்துத் தொங்கவிட்டால் அறை குளிர்ச்சியாக இருக்கும்.
வேர்க்குரு அதிகம் இருந்தால் கேலமைன் கிரீமை உடலுக்குத் தடவலாம்.
லேசான பருத்தியிலான அல்லது கதர் ஆடைகளை அணிவது நல்லது.
காலையிலும், இரவிலும் குளித்தால் உடல் சூடு குறையும்.
கண்ணிற்குக் குளிர்ச்சி தரும் கண்ணாடியை உபயோகப்படுத்தலாம்.
ஆகவே கோடையில் குளிர்ச்சி பெறத் தண்ணீர், மோர், பழரசம், பதனீர், நுங்கு, கஞ்சி போன்றவற்றைத் தினமும் சேர்த்துக்கொண்டு, லேசான பருத்தி ஆடை அணிந்து, தினமும் இருமுறை குளித்துவந்தால் போதும். நாம் இருக்கும்இடத்திலேயே ஊட்டியின் குளிர்ச்சியை ஓரளவிற்கு அனுபவமிக்க முடியும்.
.png)
1 hour ago
18







English (US) ·