சட்டமன்றத்தில் அனைவரும் சமம்: விஜய்

17 hours ago 14

d93a21fd-15a0-4c10-bdb6-8b5c05d1a77d

அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதர்களை மதிக்கும் பண்பு பேரவையில் காக்கப்பட வேண்டும் என்றார் முதல்வர் விஜய். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: சட்டமன்ற நடவடிக்கைகள் சீராக, செம்மையாக நடைபெற வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் அனைவரும் சமம் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தலைவராகச் செவ்வாய்க்கிழமை (மே 12) தவெக உறுப்பினர் ஜேசிடி பிரபாகர் தேர்வு செய்யப்பட்டார். அவரை அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து கைபிடித்து அழைத்துச்சென்று பேரவைத் தலைவருக்கான இருக்கையில் அமர வைத்தனர்.

இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய வாழ்த்துரைக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் விஜய், நடப்பு சட்டமன்றத்தில் ஏதேனும் ஒரு கட்சிக்கு ஒரேயோர் உறுப்பினர் மட்டுமே இருந்தாலும்கூட, அவரது கருத்துக்கும் உரிய மதிப்பளிக்கப்படும் என்றார்.

தற்போது அமைந்துள்ள சட்டமன்றத்தில் சபாநாயகர், துணை சபாநாயகர் இருவரும் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து மக்கள் பணியாற்றும் ஆர்வத்தில் வந்தவர்கள் என்று பாராட்டுத் தெரிவித்த திரு விஜய், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டிய பொறுப்பு சட்டமன்றத்துக்கு உள்ளது என்றார்.

“சிறிய கட்சி, பெரிய கட்சி என்று இல்லாமல் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களின் குரலுக்கும் மதிப்பளிக்கப்படும். மன்றத்தின் மாண்பையும் கண்ணியத்தையும் காக்கும் பொறுப்பு சபாநாயகருடையது.

“சட்டமன்றத்தில் அனைவரும் சமம்தான். நல்லவை ஏற்கப்பட்டு, அல்லவை நிராகரிக்கப்படும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதர்களை மதிக்கும் பண்பு பேரவையில் காக்கப்பட வேண்டும்,” என்றார் முதல்வர் விஜய்.

அதிகமான மக்கள் அதிக நன்மைகளைப் பெற்றனர் என்று கூறும் அளவுக்கு அரசின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என அவர் கூறினார். புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகிய இருவருக்கும் தவெக உறுப்பினர்கள் அனைவரும் உதவிக்கரமாக இருப்பார்கள் என வாக்குறுதி அளிக்க விரும்புவதாகவும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.

Read Entire Article