பல்கலைக்கழகப் பயணத்தில் வழிகாட்டும் ‘சாதனா’

4 hours ago 18

1d22b50f-24d6-4e66-a1cf-96888d2307cb

பிப்ரவரி 22ஆம் தேதி நடந்தேறிய சாதனா 2026ல் கலந்துகொண்ட மாணவர்களுடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். - படம்: சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை

பல்கலைக்கழகத்தில் முதலடி எடுத்து வைக்கும்போது, மாணவர்களுக்குப் பலவிதமான எதிர்பார்ப்புகளும் கேள்விகளும் இருப்பது வழக்கம். அவர்களுடைய கேள்விகளுக்கு விடை கொடுக்கும் நிகழ்ச்சியே, சாதனா 2026.

சிங்­கப்­பூர் தேசியப் பல்­க­லைக்­க­ழ­கத் தமிழ்ப் பேரவையின் ஏற்­பாட்­டில் ஆண்­டு­தோ­றும் நடை­பெ­றும் இந்­நி­கழ்ச்சி இவ்வாண்டு பிப்ரவரி 22ஆம் தேதியன்று தேசியப் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடந்தேறியது. 

உயர்நிலைப்பள்ளி, தொடக்கக்கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரிகளைச் சேர்ந்த ஏறக்குறைய 50 மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், கலைகள் போன்ற பலதரப்பட்ட துறைகளிலிருந்து, இளநிலை முதலாம், இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் பயிலும் பல்கலைக்கழக மாணவர்கள் அவர்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்தனர். 

ஒவ்வொரு துறையிலும் சேர்வதற்குத் தேவையான தகுதிகள், ஒரு துறையில் சிறப்பது எப்படி, படிப்பை முடித்த பின் எத்தகைய வேலைகளில் சேரலாம் என்பன போன்ற பல்வேறு தகவல்களையும் அவர்கள் விளக்கினர். 

இவ்வாண்டின் புதிய அம்சமாக, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களும் அவர்களுடைய பள்ளி அனுபவத்தைப் பகிர்ந்தனர். 

இந்த இரு பல்கலைக்கழகங்கள் வழங்கும் பாடங்களுக்கு இடையே உள்ள வேற்றுமை ஒற்றுமைகளைப் பகிர்ந்ததோடு, ஒவ்வொரு வளாகத்திலுள்ள தங்கும் வசதிகளைப் பற்றியும் இணைப்பாட நடவடிக்கைகளைப் பற்றியும் விரிவாகப் பேசப்பட்டது. 

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தை பங்கேற்பாளர்களுக்குச் சுற்றிக்காட்டினர் பல்கலைக்கழக மாணவர்கள்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி அவரது அனுவத்தைப் பகிர்கிறார்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி அவரது அனுவத்தைப் பகிர்கிறார். - வெங்கடேசன் வித்யா லட்சுமி

மருத்துவத் துறையில் சேர்வதற்கு பல்கலைக்கழக அனுமதிப் புள்ளிகள் (University Admission Score) அடிப்படையில் 90 புள்ளிகள் கட்டாயம் தேவை என்று எண்ணியிருந்தார் தொடக்கக்கல்லூரி மாணவியான 17 வயது குமாரி சுரேஷ் அனிகா. மதிப்பெண்கள் முக்கிய பங்கை வகித்தாலும், வேறு பல அம்சங்களும் கருத்தில்கொள்ளப்படும் என்று இந்நிகழ்ச்சியின் மூலம் தெரிந்துகொண்டது அவருக்கு ஆறுதலை வழங்கியது. 

“பாடத்திட்டங்கள் குறித்த பெரும்பாலான தகவல்கள் இணையத்தில் இருந்தாலும், இங்கு பயிலும் மாணவர்கள் அவர்களுடைய தனிப்பட்ட அனுபவத்தைப் பற்றி பகிர்ந்தது, எனக்கிருந்த ஐயங்களைத் தீர்த்து வைத்தது,” என்றார் தொடக்கக்கல்லூரி மாணவியான குமாரி அட்சயாமூர்த்தி, 17.

‘டிபிஸ்’ (dps) அனைத்துலகப் பள்ளியில் பயிலும் 15 வயது மாணவி, ஹர்ஷிதா தேவி ஹரிஹரன், பாடத்திட்டங்களுக்கு அப்பால், பள்ளி வாழ்க்கையைப் பற்றியும் பேசியது சிறப்பாக இருந்தது என்றார்.

மருத்துவம், அறிவியல் மாணவர்களின் பகிர்வில் கலந்துகொண்ட அவர், பல்கலைக்கழகப் படிப்பு குறித்த ஒரு தெளிவைப் பெற்றிருப்பதாகக் கூறினார். 

பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிக்காட்டும் தமிழ்ப் பேரவை உறுப்பினர்கள்.

பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிக்காட்டும் தமிழ்ப் பேரவை உறுப்பினர்கள். - வெங்கடேசன் வித்யா லட்சுமி

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சென்ற ஆண்டிலிருந்தே துவங்கின. பல சவால்களை எதிர்நோக்கினாலும் தமிழ்ப் பேரவை மன்ற உறுப்பினர்களும் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்களும் நிகழ்ச்சிக்கு முழு ஆதரவு அளித்ததாகக் குறிப்பிட்டார் தமிழ்ப் பேரவையின் துணைத் தலைவி, வைஷ்ணவி கண்ணன், 21. 

சாதனா திட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சியாக பிப்ரவரி 21ஆம் தேதி பல்கலைக்கழக மாணவர்களுக்கும் முகாம் நடத்தப்பட்டது.

அதில், பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்துவது, வேலையிடத்தில் முன்னேறி, வாழ்க்கையில் வெற்றி பெறுவது போன்ற தலைப்புகளில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் முன்னாள் மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர். 

தமிழ்ப் பேரவையின் முன்னாள் மாணவர்கள் பலர், அவர்களுடைய துறைகளில் தங்களுக்கென தனி இடம்பிடித்து, முத்திரை பதித்து வருகின்றனர். 

நிலையற்ற உலகச் சூழலில், வேலை வாய்ப்புகள் குறித்த பல ஐயங்கள் மாணவர்களுக்கு உள்ளன. தற்போதைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவர்கள் நல்ல வழிகாட்டுதலை வழங்கி, ஐயங்களைப் போக்க உதவுவர் என்ற நோக்குடன் சாதனா திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார் வைஷ்ணவி.

பல்கலைக்கழக மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சாதனா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேச்சாளர்கள்.

பல்கலைக்கழக மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சாதனா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேச்சாளர்கள். - சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்

வங்கியியல், தொழில்முனைப்பு, தகவல் தொழில்நுட்பம், அரசுப் பணி, உயிரியல் மருத்துவம், உள்ளிட்ட ஐந்து துறைகளிலிருந்து வல்லுநர்கள் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 40 பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Read Entire Article