சிங்கப்பூரில் விலைவாசி உயரும் அபாயம்; துணைப் பிரதமர் கான் கிம் யோங் எச்சரிக்கை

2 hours ago 15

8affb323-bb09-4f2a-b26d-d78522a8f5d6

மத்தியக் கிழக்கு நிலவரங்களைச் சிங்கப்பூர் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்றும் தேவைப்பட்டால் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிப்பை மறுபரிசீலனை செய்யும் என்றும் துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறினார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

மத்தியக் கிழக்கில் போர் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால், சிங்கப்பூர் அதிக விலைவாசி உயர்வுச் சுமையை எதிர்கொள்ள நேரிடும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமையன்று (மார்ச் 2) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திரு கான், புவிசார் அரசியல் மோதல்கள் சிங்கப்பூர் போன்ற சிறிய மற்றும் திறந்த பொருளியலைக் கொண்ட நாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாலும் அதற்குப் பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியதாலும் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்லும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

“குறுகிய காலத்தில், இது உலகளாவிய எரிசக்தி விலைகளில் உயர்வை ஏற்படுத்தக்கூடும். இந்த மோதல் எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பதைப் பொறுத்து, எரிசக்தி விலையேற்றம், வணிகங்கள் மற்றும் பயனீட்டாளர்களுக்கு அதிக செலவுகளை ஏற்படுத்தும். இது உலகளாவிய மற்றும் சிங்கப்பூர் பொருளியலைப் பாதிக்கும்,” என்றும் திரு கான் தெரிவித்தார்.

மத்தியக் கிழக்கு நிலவரங்களைச் சிங்கப்பூர் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்றும் தேவைப்பட்டால் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிப்பை மறுபரிசீலனை செய்யும் என்றும் துணைப் பிரதமர் கூறினார்.

சிங்கப்பூர் நாணய ஆணையம் திங்கட்கிழமையன்று (மார்ச் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்நாட்டுப் பொருளியல் மற்றும் நிதி அமைப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தை மதிப்பீடு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் அந்நியச் செலாவணி மற்றும் பணச் சந்தைகள் தொடர்ந்து சாதாரணமாக இயங்குவதை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

எண்ணெய் விலைகளுக்கான முக்கிய உலகளாவிய அளவுகோலான ‘பிரண்ட்’ கச்சா எண்ணெய், வர்த்தகத்தின் தொடக்கத்தில் பீப்பாய்க்கு 82.37 அமெரிக்க டாலராக உயர்ந்தது. இது 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த விலையாகும். பின்னர் இது சற்று குறைந்து 79.86 டாலராக வர்த்தகமானது. இருப்பினும், இது பிப்ரவரி 27ஆம் தேதி விலையைவிட 9.5 விழுக்காடு அதிகமாகும் மற்றும் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏறத்தாழ 30 விழுக்காடு உயர்ந்துள்ளது.

Read Entire Article