சிங்கப்பூர், மலேசிய ஆகாயப் படைகளின் தேடுதல், மீட்புக்கான கூட்டுப் பயிற்சி

1 hour ago 7

97b31c1c-a170-4c54-b48f-621940ef8e21

இரு படைகளுக்கும் இடையில் தேடுதல் மீட்புப் பணிகளுக்கானப் பயிற்சிகள் மலேசியாவின் குவாந்தான் ராணுவ விமானத் தளத்தில் நடந்தது. - படம்: ஏஷியா ஒன்

சிங்கப்பூர் ஆகாயப் படையும் மலேசிய அரச விமானப் படையும் இணைந்து எட்டாம் ஆண்டாக தேடல், மீட்புப் பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தன.

இதனை சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு வியாழக்கிழமை (ஜூலை 23) அதன் அறிக்கையில் தெரிவித்தது.

‘சாரெக்ஸ் மால்சிங்’ என்றழைக்கப்படும் இந்த இருதரப்புப் பயிற்சி, மலேசியாவிலுள்ள குவாந்தான் மாநிலத்தின் ராணுவ விமானப்படைத் தளத்தில் ஜூலை 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை (ஒரு வாரம்) நடைபெற்றது.

இந்தப் பயிற்சியில் சிங்கப்பூர் விமானப் படையின் H225M ஹெலிகாப்டரும், மலேசிய அரச விமானப் படையின் EC725 ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டன.

அவற்றுடன் இரு நாடுகளையும் சேர்ந்த விமானப்படை வீரர்கள், தரைப்படையினர், மருத்துவக் குழுவினர் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர்.

மலேசியாவின் தியோமான் தீவுக்கு அருகில் ஆகாயத்தில் அசம்பாவிதம் நேர்வது போன்ற பாவனைச் சூழல் உருவாக்கப்பட்டது. அத்தகைய அவசர நிலையை இரு நாட்டுப் படையினரும் இணைந்து எவ்வாறு திறம்படக் கையாள்வர் என்பது குறித்து விரிவான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாண்டுப் பயிற்சியில் புதிய அம்சம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், பாதிக்கப்பட்டோராகப் பாவனை செய்யப்பட்டவர்களுக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையான மருத்துவக் கவனிப்பு அளிக்கும் சிறப்புப் பயிற்சி இரு நாட்டு மருத்துவக் குழுக்களுக்கும் வழங்கப்பட்டது.

அதன்படி விமானத்தில் இருந்து ஒருவர் நிலத்தில் உள்ள மருத்துவ உதவி நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும் வரையிலான பயிற்சிகள் உள்ளடங்கின.

விமானப் பயணத்தின்போது வழங்கப்படும் அவசரச் சிகிச்சை முறைகள், நோயாளிகளைப் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றுதல் உள்ளிட்ட அம்சங்கள் அவையாகும்.

இரு நாட்டு விமானப் படைகளுக்கும் இடையே நிலவும் நெருங்கிய, நீடித்த நல்லுறவையும் கூட்டாகச் செயல்படும் ஆற்றலையும் இந்த வருடாந்தரப் பயிற்சி மேலும் வலுப்படுத்தியுள்ளது.

பயிற்சிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிங்கப்பூர் ஆகாயப் படையின் ஆகாயச் செயல்பாடுகளுக்கான தலைவர் தளபதி புவா ஜியா காய், இரு நாடுகளின் அணுக்கமான நல்லுறவை இந்தப் பயிற்சிகள் பறைசாற்றுவதாகக் கூறினார்.

“எங்கள் இரு நாடுகளும் புவியியல் ரீதியாக எல்லைகளை மட்டும் பகிரவில்லை. ஆழமான வரலாற்று சிறப்புமிக்க உறவுகளையும் இருதரப்பு தற்காப்பு செயல்பாடுகளிலும் பங்கு கொண்டுள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.

Read Entire Article