சிங்கப்பூர்ப் பொருளியல் மூன்றாம் காலாண்டில் 2.9% வளர்ச்சி

6 hours ago 2

14315512-1642-4572-a037-dbed416f194f

உற்பத்தித் துறையின் வளர்ச்சி முந்திய காலாண்டைக் காட்டிலும் மெதுவடைந்தது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் பொருளியல் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில், ஆண்டு அடிப்படையில் 2.9 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. முந்திய காலாண்டில் பொருளியல் வளர்ச்சி 4.5 விழுக்காடாக இருந்தது.

ஆயினும் மூன்றாம் காலாண்டின் வளர்ச்சி, பொருளியல் வல்லுநர்களின் எதிர்பார்ப்பை விஞ்சியிருக்கிறது. பொருளியல், 2 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று புளூம்பெர்க் கருத்துக்கணிப்பில் அவர்கள் முன்னுரைத்திருந்தனர்.

காலாண்டு அடிப்படையில், பொருளியல் 1.3 விழுக்காடு கூடியது. இரண்டாம் காலாண்டு வளர்ச்சி விகிதமான 1.5 விழுக்காட்டைவிட அது சற்றுக் குறைவு.

வர்த்தக, தொழில் அமைச்சு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) வெளியிட்ட முன்னோடி மதிப்பீட்டு அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

உற்பத்தித் துறையின் வளர்ச்சி சென்ற காலாண்டைக் காட்டிலும் மெதுவடைந்தது. போன காலாண்டில் அது 5 விழுக்காடு ஏற்றங்கண்டிருந்தது.

உயிர்மருத்துவ, பொது உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி குறைந்ததால் ஒட்டுமொத்தத் தொழிற்சாலை உற்பத்தி இறங்கியது.

கட்டுமானத் துறை ஆண்டு அடிப்படையில் 3.1 விழுக்காடு உயர்ந்தது. முந்திய காலாண்டில் பதிவான 6.2 விழுக்காட்டு வளர்ச்சியைக் காட்டிலும் அது குறைவு.

மூன்றாம் காலாண்டில் அந்தத் துறை வளர்ச்சி கண்டதற்கு அரசாங்க, தனியார் துறைகளின் கட்டுமான நடவடிக்கைகள் பெருகியது ஆதரவாக அமைந்தது.

மொத்த விற்பனை, சில்லறை விற்பனை உள்ளிட்ட சேவைத் துறைகளும், போக்குவரத்து, சேமிப்புத் துறைகளும் கூட்டாக மூன்றாம் காலாண்டில் 2.5 விழுக்காட்டு உயர்வைக் கண்டன. அந்த விகிதம், அதற்கு முந்திய காலாண்டின் 4.9 விழுக்காட்டு வளர்ச்சியைவிடக் குறைவு.

தகவல், தொடர்பு, நிதி, காப்புறுதி, நிபுணத்துவச் சேவைத் துறைகளைப் பொறுத்தவரை, மூன்றாம் காலாண்டில் 4.4 விழுக்காட்டு வளர்ச்சி பதிவானது. இரண்டாம் காலாண்டின் 4.3 விழுக்காட்டு வளர்ச்சியைக் காட்டிலும் அது கொஞ்சம் குறைவு.

மூன்றாம் காலாண்டில் சொத்துச் சந்தை, தங்குமிடம், உணவு, நிர்வாகம் முதலிய சேவைத் துறைகளின் வளர்ச்சி 4.1 விழுக்காடு விரிவடைந்தது. அவற்றின் வளர்ச்சி முந்திய காலாண்டில் 4 விழுக்காடாக இருந்தது.

Read Entire Article