சிராங்கூன் ரோடு 562சி கடை வீட்டில் தீயணைப்பு முயற்சிகள். - படம் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை
சிராங்கூன் சாலையிலுள்ள கடை வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஸ்டர்டீ ரோட்டுக்கு அருகிலுள்ள லட்சுமி விலாஸ் உணவகம் தரைத்தளத்தில் அமைந்துள்ள நான்கு அடுக்கு கடை வீட்டிலிருந்து புகை வெளிவந்ததை வாசகர் ஒருவர் அனுப்பியுள்ள படங்கள் காண்பிக்கின்றன.
சம்பவ இடத்தைச் சுற்றி தீயணைப்பு வாகனம், மருத்துவ உதவி வாகனம், காவல்துறை வாகனம், பாரந்தூக்கி ஆகியவை இருந்ததும் படங்கள் காண்பிக்கின்றன.
புதன்கிழமை காலை (ஜூலை 22) சிராங்கூன் ரோடு 562சி கடை வீட்டில் காலை கிட்டத்தட்ட 9:30 மணிக்கு தீவிபத்து நேர்ந்ததாகச் சிங்கப்பூர்ல் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் வெளியிட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், அந்தக் கடைவீட்டின் நான்காவது மாடி தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததைக் கண்டனர்.
தீயணைப்பில் மும்முரமாக ஈடுபடும் அதிகாரிகள். - படம்: சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை
தீயை அணைக்க அதிகாரிகள் தண்ணீரைப் பீச்சியடிக்கும் குழாய்களைப் பயன்படுத்தினர்.
கடை வீட்டுக்கு முன் தீயணைப்பு வாகனம் - படம்: தமிழ் முரசு வாசகர்
அத்துடன், அருகிலுள்ள கடைகளுக்கு நெருப்பு பரவாமல் தடுப்பதற்காக உயர்தள ஏணி வாகனத்தின் உதவியுடன் உயரத்திலிருந்து தண்ணீரைப் பீச்சியடிக்கும் முறையும் பயன்படுத்தப்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியில் தீ மீண்டும் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அருகிலுள்ள கடைகளிலிருந்து கிட்டத்தட்ட 40 பேர் காவல்துறையினராலும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளாலும் வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவத்தில் எவரும் காயமடைந்ததாக இதுவரை தகவல் இல்லை.
தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்கிறது.
.png)








English (US) ·