சுகாதாரப் பராமரிப்பில் ‘ஏஐ’ அனுபவம் தேசிய செயற்கை நுண்ணறிவு மன்றத்துடன் பகிரப்படும்: ஓங் யி காங்

1 hour ago 17

a3091e82-f204-451b-a7c7-2de685e4285a

சுகாதார அமைச்சர் ஓங் யி காங் (இடது), புதிய ‘கேலப்.எஸ்ஜி’ தொழுவத்தின் திறப்புவிழாவில், குதிரையுடன் படம் எடுக்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு உத்தியை வடிவமைப்பதில் சுகாதாரப் பராமரிப்புத் துறை பங்காற்றும்.

புதிய தேசிய செயற்கை நுண்ணறிவு மன்றத்துடன் தமது அமைச்சு அதன் செயற்கை நுண்ணறிவு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.

அமைச்சுகளுக்கு இடையிலான மன்றத்தில் இடம்பெற்றுள்ள திரு ஓங், சுகாதார அமைச்சு சில காலமாகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திவருவதாகக் கூறினார்.

மருத்துவர்களுக்கும் தாதியருக்கும் தொடர்ந்து தகவல்கள் தெரிவிக்கப்படவேண்டும் என்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் முறைகள் அவர்கள் மேலும் நன்கு பணிபுரிவதற்கு உதவும் என்றும் திரு ஓங் செய்தியாளர்களிடம் கூறினார்.

தற்போது சவால்கள் உள்ள அம்சங்களிலும், சம்பவங்களை மையமாகக் கொண்டுள்ள முறையில், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படவேண்டும் என்றார் அவர்.

“நமது அனுபவத்தினால் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை தேசிய செயற்கை நுண்ணறிவு மன்றத்தில் பகிர்ந்துகொள்ளலாம். நாமும் நிறையக் கற்றுக்கொள்ளலாம்.

“செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் தொடர்பில் மேலும் முன்னேற்றம் காணலாம்,” என்று சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஓங் கூறினார்.

“இறுதியில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால், சுகாதாரப் பராமரிப்பு மேம்படும், நோயாளிகள் பயனடைவர், மருத்துவர்களின் பணி மேம்படும்,” என்றார் அவர்.

கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி வெளியிடப்பட்ட வரவுசெலவுத் திட்டம் 2026ல், பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமைதாங்கும் புதிய தேசிய செயற்கை நுண்ணறிவு மன்றம் குறித்து அறிவிக்கப்பட்டது.

உத்திபூர்வ நன்மையாக அமையும் வகையில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த சிங்கப்பூருக்கு உதவுவதே அதன் நோக்கம்.

மன்றம், நான்கு முக்கியத் துறைகளில் தேசிய அளவில் செயற்கை நுண்ணறிவு இலக்குகளைச் செயல்படுத்தும். மேம்பட்ட உற்பத்தி, போக்குவரத்து இணைப்பு, நிதி, சுகாதாரப் பராமரிப்பு ஆகியவையே அவை.

‘கேலப்.எஸ்ஜி’ குதிரைத் தொழுவத்தின் திறப்புவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசினார், செம்பவாங் குழுத்தொகுதி ஆலோசகருமான திரு ஓங்.

அட்மிரல்டி ரோட் ஈஸ்ட்டில் அமைந்துள்ள அந்தக் குதிரைத் தொழுவம், சிங்கப்பூரின் நான்காவது ‘கேலப்.எஸ்ஜி’ சவாரிப் பள்ளியாகும். அதில் 150 குதிரைகள் உள்ளன.

Read Entire Article