சென்னை, அக். 13- சென்னை – கிண்டி பகுதியில் அமைந்துள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மய்யத்தில் எளிதில் அணுகி பார்வையிடும் வசதிகளை – குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு அனுகூலமான வசதி வாய்ப்புகளை உருவாக்கப்பட்டுள்ளன. சென்ற வாரம் அந்த வசதி வாய்ப்பு கட்டமைப்புகள் உச்சநீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தொடங்கி வைத்தார்.
ரூ.45 லட்சம் செலவில் உருவாக்கப் பட்டுள்ள இந்த கட்டமைப்புகளை சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தின் (Indian Institute of Technology, Madras (IIT-M)) ஒருங்கிணைப்புடன் பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மய்யம் பொதுமக்கள் பார்வையிடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட கட்டமைப் புகள் மாறறுத்திறனாளிகளின் பயன் பாட்டிற்கு இலகுவாக – குறிப்பாக பார்வைக் குறைபாடு உள்ளவர்களின் பயன்பாட்டிற்கு ஏதுவாக உள்ளன. அறிவியல் பற்றிய செய்திகளை அவர்களுக்கு புரியும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒலி, ஒளி அமைப்பினை வல்லுநர்களைக் கொண்டு ஏற்படுத்தி ‘தொடுதல் – உணர்தல் (Touch and Feel)‘ அனுபவத்தின் மூலம் பார்வைக் குறைபாடு உள்ள பார்வையாளருக்கு உதவிடும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோ.வி.செழியன் பங்கேற்று சிறப்பித்தார். தமிழ்நாடு அறிவியல் ம்ற்றும் தொழில்நுட்ப மய்யத்தின் வளர்ச்சிக்கு நன்கொடை அளித்திட விரும்புவோர் QR கோடு மூலம் செலுத்திடும் வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பெரியார் கோளரங்கத்தின் இயக்குநர், தமிழ்நாடு உயர் கல்வித் துறையின் செயலாளர் ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கலந்து கொண்டனர். மய்யத்தின் செயல் இயக்குநர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி வாய்ப்புகள், கோளரங்கின் சில பகுதிகளில் மட்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கோளரங்கின் ஒவ்வொரு பார்வையாளர் அரங்கிலும், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதி வாய்ப்புகளை வழங்கிடும் முயற்சிகள் விரைவில் எடுக்கப்படும் என்றார்.
பள்ளி கல்லூரி மாணவர்களுள் ஏற் கெனவே கோளரங்கத்தினை பார்வையிட்ட மாணவர்களும் மறுபடியும் பார்க்கின்ற வகையில் கூடுதல் வசதிகள், மாற்றுத் திறனாளி பார்வையாளர்களும் புதிய சூழலில் கோளரங்கத்தினை பார்த்து மகிழலாம், பயனடையலாம்.