கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணி ஒருவரிடமிருந்து 360 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்
திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள விமான நிலையங்கள் வழியாக தங்கத்தைக் கடத்துவது அதிகரித்துள்ளது.
அவ்வகையில், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) திருவனந்தபுரம், கொச்சி விமான நிலையங்கள் வழியாகக் கடத்த முயன்ற தங்கத்தைச் சுங்க, வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அன்றைய நாள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணி ஒருவரிடமிருந்து 360 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதுபோல, கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஒரு விமானத்தில் 630 கிராம் தங்கம் கேட்பாரற்றுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
“தங்கத்தின் விலை கூடியுள்ளதால் அதனைக் கடத்துவது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது,” என்று கொச்சி சுங்க ஆணையம் ஓர் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளது.
“கடத்தல்காரர்கள் புதுமையான வழிகளில் தங்கள் உடல் அல்லது உடையில் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வருகின்றனர். முத்துமாலை அல்லது மணிமாலை போன்றும் தங்கத்தை மறைத்து எடுத்துவந்த நிகழ்வும் இடம்பெற்றுள்ளது,” என்று அவ்வறிக்கை விளக்கியது.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலைவரை, கேரள விமான நிலையங்கள் வழியாக தங்கம் கடத்த முயன்றதாக 87 வழக்குகள் பதிவாகியுள்ளன. அச்சம்பவங்களில் மொத்தம் 40.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் அவற்றின் மதிப்பு ரூ.32 கோடி (S$4.75 மில்லியன்) என்றும் தெரிவிக்கப்பட்டது.
தங்கத்தின்மீதான இறக்குமதி வரி 15 விழுக்காட்டிலிருந்து ஆறு விழுக்காடாகக் குறைக்கப்பட்டதை அடுத்து தங்கக் கடத்தல் குறைந்தது. ஆனால், அதன் விலையேற்றத்தால் கடத்தல் முயற்சிகள் மீண்டும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், தங்கத்தின் விலை குறைந்தால் அதனைக் கடத்துவதும் குறையக்கூடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.