கரூர் துயர சம்பவம் குறித்து முதல்வர் சட்டப்பேரவையில் விளக்கமளித்தார். கூட்ட நெரிசலுக்கு காலதாமதமும், ஏற்பாட்டாளர்களின் குறைபாடுகளுமே காரணம் எனக் கூறிய அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற துயர சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில்: கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவரின் அரசியல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தக் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் பல்வேறு இடங்களைக் குறிப்பிட்டு அனுமதியைக் கோரியதையடுத்து, அவர் அனுமதி கோரிய இடங்களில், போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதாலும், பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களாலும் அனுமதி வழங்கவில்லை. செப்டம்பர் 25ம் தேதி காலை லைட்ஹவுஸ் கார்னர் அல்லது உழவர் சந்தை பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவும், கூட்ட அளவு மதிப்பீடு மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் அனுமதி வழங்க இயலவில்லை. பிறகு 26 அன்று, அக்கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதியன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரினார். அவர் கொடுத்த மனு ஏற்கப்பட்டு, 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
கரூர் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் காவல் துறையின் சார்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 606 போலீசார் பாகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதாவது அறிவிக்கப்பட்ட 12 மணியைக் கடந்து, 7 மணி நேரம் கழித்துத்தான் வந்தார். இந்தக் காலதாமதம் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. காலை முதல் காத்திருந்த மக்களுக்குப் போதிய குடிநீர் வழங்கவில்லை; உணவு வழங்க எந்தவிதமான ஏற்பாடுகளும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களால் செய்யப்படவில்லை.
கூட்டத்தின் ஒருபகுதியினர் ஜெனரேட்டர் பகுதிக்குள் நுழைந்து, தகரக் கொட்டகையை அகற்றியும் வெளியேற முயற்சி செய்திருக்கிறார்கள். இதனால் மின்சாரம் தாக்குவதைத் தடுக்க, ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தைத் துண்டித்திருக்கிறார். நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கூட்ட நெரிசலால் காயமடைந்தும், சோர்வினால் மயக்கமடைந்தும் மக்கள் உதவி கோருவதை கவனித்து, காவல் துறையினர் மருத்துவமனை ஆம்புலன்சுக்கு தகவல் அனுப்பி வரவழைத்திருக்கிறார்கள். இவ்வாறு கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அவர்களைக் காப்பற்றத்தான் ஆம்புலன்ஸ் வந்ததே தவிர, நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்சும் வரவில்லை என்றார்.
மேலும் அனைத்து உடல்களையும் வைக்க போதுமான குளிர்சாதன வசதி இல்லை என்பதால் இரவோடு இரவாக உடற்கூறாய்வு செய்யப்பட்டது; இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வு செய்யும் பணி அதிகாலை 1.41 மணிக்கு தொடங்கியது. இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதல்வர் ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. பின்னர் வெளிநடப்பு செய்த இபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதாவது எங்களுக்கு நிராகரித்த இடத்தை தவெகவிற்கு எதற்காக அரசு கொடுத்தது என கேள்வி எழுப்பினார். கரூரில் 500 காவலர்கள் பாதுகாப்பு என ஏடிஜிபி கூறுகிறார். ஆனால் முதலமைச்சர் 606 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். இதிலேயே முரண்பாடு. இதனால் தான் கரூர் சம்பவத்தில் அரசின் மீது சந்தேகம் எழுகிறது என்றார். இந்நிலையில் தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது. இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.